சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற நபருக்கு ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்..!!
அன்டனநாரிவோ: மடகாஸ்கரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்றவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த தீவு நாடான மடகாஸ்கரில் தலைநகர் அன்டனநாரிவோவில் இருந்து 30 கி.மீ. மேற்கே ஐமெரீன்ட்சியாடோசிகா என்ற நகரம் உள்ளது. இங்கு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற வழக்கில், குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் (castration) செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர், "இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதனுடன், கடுமையான வேலைகளுடன் ஆயுள் தண்டனையும் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனை ஊடகத்திற்கு, அந்நாட்டின் நீதி துறை வீடியோவாக தகவல் வெளியிட்டு உள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வழக்குகளுக்கு 2024 இல் மடகாஸ்கரில் இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டது. செக் குடியரசு, ஜெர்மனி நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் ஒப்புதலுடன், பாலியல் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் லூசியானாவில் கடந்த ஆண்டு இந்த நடைமுறை கட்டாயம் ஆக்கப்பட்டது. போலந்து மற்றும் தென்கொரியா நாடுகளிலும் இந்த தண்டனை காணப்படுகிறது. இங்கிலாந்து இதுபற்றிய பரிசீலனையில் உள்ளது. இருப்பினும் மனித உரிமை அமைப்புகள் இந்த இரு நடைமுறைகளையும் விமர்சித்துள்ளன.