சென்கோப்டெக்ஸ் கூட்டுறவு நிறுவனத்துக்கு தேசிய விருது: சென்னிமலைக்கே புகழ் சேர்ப்பதாக கைத்தறி நெசவாளர்கள் பெருமிதம்
ஈரோடு: பெட்ஷீட் உற்பத்திக்கு பெயர் பெற்ற சென்னிமலையில் மூன்று தலைமுறையை கண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தேசிய அளவில் விற்பனைக்கான விருதை பெற்றுள்ளது. இது தங்களுக்கான அங்கீகாரம் என்று பெருமை தெரிவித்துள்ள நெசவாளர்கள் கைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி உள்ளனர். இந்த நவீன யுகத்திலும் இப்படி ஒரு தொழிலா என்று பரிதாபப்படுபவர்கள் அதிகம் இருக்க முடியும்.
கைத்தறி உற்பத்திக்கு பெயர் பெற்ற ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெறும் பாரம்பரிய தொழில் தான் இது. இங்க 30க்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கினாலும், தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கமான சென்கோப்டெக்ஸ் அவற்றில் முக்கியமானது. 1962இல் 51 உறுப்பினர்கள் மூலம் தொடங்கப்பட்டு 4000 உறுப்பினர் வரை உயர்ந்த இந்த சங்கம், தற்போது கைத்தறி நெசவாளர் பற்றாகுறையால் 338 உறுப்பினராக மாறிவிட்டது.
சென்னிமலையில் உற்பத்தியாகும் போர்வைகள், மெத்தை விரிப்புகள், துண்டுகள், வேட்டி சட்டைகள் மட்டுமின்றி சவுதி அரேபியா, ஏமன், நைஜீரியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலை இல்லாத சீருடைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த தொழிலை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.
நெசவாளர் கூட்டுறவு சங்கமான சென்கோப்டெக்ஸ் கடந்த ரூபாய் 10 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்டியுள்ளது. இந்நிலையில் விற்பனைக்கான பிரிவில் ஒன்றிய அரசின் விருது இந்த சங்கத்துக்கு கிடைத்துள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.