திருவனந்தபுரம்: தடையை மீறி சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து ஆயுதப்படை ஏடிஜிபி அஜித்குமார் கலால் துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கேரள ஆயுதப்படை பட்டாலியன் ஏடிஜிபியாக இருந்தவர் அஜித்குமார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அஜித்குமார் டிராக்டரில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்கு பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் டிரைவர் தவிர வேறு யாரும் பயணம் செய்யக்கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி போலீஸ் ஏடிஜிபியே டிராக்டரில் சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏடிஜிபி அஜித்குமார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து ஏடிஜிபி அஜித்குமார் டிராக்டரில் சென்றது தவறுதான் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி டிஜிபி ரவடா சந்திரசேகர் கேரள அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் ஏடிஜிபி அஜித்குமாரை கலால் துறை ஆணையராக மாற்றி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கடந்த வருடம் நடந்த திருச்சூர் பூரம் திருவிழாவில் ஏற்பட்ட சில பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.