தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிபிஐக்கு முழுமையாக விலக்கு அளிக்கவில்லை: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி எய்ம்ஸில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் அபெக்ஸ் ட்ராமா சென்டரில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு சிபிஐயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சதுர்வேதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். மனு தாக்கல் செய்த சதுர்வேதி, ஏற்கனவே எய்ம்ஸ் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றி இருந்தார். மேலும், அவரே ஊழல் விவகாரம் குறித்து அரசுக்கு அறிக்கையும் அளித்திருந்தார். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. அதனால், சிபிஐ விசாரணை தொடர்பான விவரங்களை கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சதுர்வேதி விண்ணப்பித்தார்.
ஆனால் சதுர்வேதியின் கேள்விகளுக்கு சிபிஐ பதில் அளிக்கவில்லை. அதனால் அவர் மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார். அந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், சதுர்வேதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. மேலும், அவர் கேட்கும் தகவல்களை சிபிஐ அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை சிபிஐ அணுகியது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் சிபிஐக்கு பொருந்தாது’ என்று கூறப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை.
ஊழல் மற்றும் உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை மக்கள் கேட்டால், அதற்கு பதில் அளிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராத அமைப்புகளின் பட்டியல் பிரிவு 24ல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிபிஐயும் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளுக்கு முழுமையாகப் பொருந்தாது என்று அர்த்தம் இல்லை’ என்று உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் தீர்ப்பில் கூறியுள்ளார். எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சிபிஐ-யிடம் விண்ணப்பித்தாலும் குறிப்பிட்ட சில தகவல்களை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.