Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருகின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரத்தொடங்கியுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நியூயார்க், நியூஜெர்சி, வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பால்ட்டிமோர், பாஸ்டன், டாலஸ், ஹியூஸ்டன், பிலடெல்பியா, அட்லாண்டா இப்படி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீங்கள் வசித்து வருகிறீர்கள். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இந்திய இன மக்கள் இருக்கின்றீர்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு இருக்கின்றீர்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும், என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்கு தான் நான் இப்போது இங்கு வந்திருக்கிறேன். நம்முடைய இந்தியாவும், நீங்கள் இருக்கக்கூடிய அமெரிக்காவும் உலகில் இருக்கக்கூடிய மிக முக்கியமான நாடுகள். இரண்டுமே ஜனநாயக நாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருக்கிறது என்றால், ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது.

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான நட்பு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் வர்த்தகம், அறிவியல், கணினி ஆகிய துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. கேல்லப் என்ற நிறுவனத்தினுடைய பொது கருத்து கணிப்பின்படி அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தை இந்தியா பெற்றிருக்கிறது. அதேபோல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் பட்டியலில் இந்திய மக்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா குடியுரிமை பெற்றவர்களில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் 12.7 விழுக்காடு. இந்தியர்கள் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவை ஈர்க்கின்ற நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் வாழ்கின்ற மக்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றாலும் உயர் கல்வியிலும், வர்த்தகத்திலும், சிறப்பான உயர் பதவிகளிலும் இந்திய வம்சாவளியினர் மிக அதிக இடங்களைப் பெற்றிருக்கின்றார்கள்.

அமெரிக்க நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகமும் மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. இவையெல்லாம் இரண்டு நாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள். ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா - அமெரிக்கா உறவு மிக மிக முக்கியமாக இருக்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்திய வம்சாவளியினர் மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பது உங்கள் மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும் போதே எனக்கு தெளிவாகத் தெரிகிறது. இந்தியா - அமெரிக்கா நட்பு என்பது இரண்டு நாட்டு அரசுகளின் உறவாக மட்டுமில்லாமல், இரண்டு நாட்டு மக்களின் நட்புறவாகவும் எப்போதும் அமைந்திருக்கிறது என்பது தான் இரு நாடுகளுக்கிடையிலான தனிச் சிறப்பு. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு என்பது அமெரிக்காவின் ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருப்பது தான் இதற்கு காரணம். 300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நேரில் அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும் என்று உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு செடியையோ, மரத்தையோ ஒரு இடத்திலிருந்து எடுத்து இன்னொரு இடத்தில் நட்டால் எல்லா செடியும் மரமும் அங்கு வளருவது இல்லை. ஆனால், நீங்கள் எல்லோரும் நாடுகள் கடந்து வந்திருந்தாலும் மிக மிக சிறப்பாக வளர்ந்திருக்கிறீர்கள். இது தான் நம்முடைய இந்தியருடைய பெருமை. இது தான் அமெரிக்காவின் வளம். சிலர் விரும்பி வந்திருக்கலாம், சிலரை சூழ்நிலைகள் துரத்தியிருக்கலாம், உங்களில் சிலர் வசதியான சூழ்நிலையிலிருந்து வந்திருக்கலாம், சிலர் வசதி குறைவினாலும் கூட இங்கு வந்திருக்கலாம். ஆனால், இன்று எல்லோரும் உன்னதமான இடத்தை பிடித்திருக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் உங்களது உழைப்பும், அறிவும், திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் காரணம். மிகச் சிறந்த கல்வி, அந்த கல்வியில் அறிவுக் கூர்மை, தனித் திறமைகள், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, குறிப்பிட்ட இலக்கை அடைய தளராத முயற்சிகள், இவை தான் உங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து உயர்த்தியிருக்கிறது. பணம், புகழ், அதிகாரம், வசதி வாய்ப்புகளை விட இந்த ஐந்தும் தான் உங்களை வளர்த்து இருக்கிறது. இந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களுக்கும் உணர்த்தி அனைவரின் வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். வேற்றுமை எண்ணம் துளியும் இல்லாமல் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.