Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை; முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன்: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை; முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்தான அறிக்கையானது குப்பைகளை வீட்டுக்கு வீடு சேகரித்தல், குப்பைகளை வகைப்பிரித்தல், குப்பை மேடுகளை மறுசீரமைத்தல், நீர்நிலைகள், சந்தைகள், பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை நகரம் கடைசி இடமான 40வது இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை நகரத்தைப் பொருத்தவரையில் வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிக்கப்படுவது 37%, குப்பை வகைப்பிரித்தல் 26%, உருவாக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து கையாளும் திறன் வெறும் 4%, குப்பை மேடுகளை மறுசீரமைத்தல் 25% என்கிற அடிப்படையில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

அதேநேரம் குடியிருப்புகள், சந்தைகள், நீர்நிலைகளின் தூய்மை எனும் பிரிவுகளில் 100% பெற்றுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் தூய்மையின்றி இருப்பதை 3% மதிப்பெண் பெற்றதை வைத்து அறிய முடிகிறது. மாநில அளவிலும் கணக்கெடுக்கப்பட்ட 651 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை 543வது இடத்தையேப் பெற்றுள்ளது. இக்கணக்கெடுப்பின் நெறிமுறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மதுரை நகரத்தின் தூய்மை மிக மோசமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மதுரை மாநகராட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்திற்காக மக்கள் நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்தபோது நாட்டிலேயே சிறந்த முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரும் கோயிலாக அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவிலே அதிக திருவிழா நடக்கிற கோயிலை நாட்டிலேயே தூய்மையாக நிர்வகிக்கப்படும் கோயிலாக திரு. கருமுத்து கண்ணன் அவர்களின் தலைமையிலான குழு செய்து காட்டியது.

பல லட்சம் பேர் வந்து செல்கிற கோயிலை அவ்வளவு தூய்மையாக நிர்வகிக்க முடிந்த போது மதுரை நகரைத் தூய்மையாக நிர்வகிப்பது கடினமல்ல. அதற்கான நிர்வாகத் திறனும், நோக்கத்தின் நேர்மையும் மிக முக்கியமானது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரத்தை உளப்பூர்வமாக நேசித்து பணியாற்றும் உள்ளமும், திறனும் முக்கியமானது.

இந்த புள்ளிவிபரம் வெளிவந்த பின்னணியிலாவது மதுரை மாநகராட்சி விழிப்புற்று செயல்பட வேண்டும். தங்களின் நடைமுறைகளை சுயபரிசோதனை செய்து கொண்டு உரிய நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். மாநில நகராட்சித்துறை அமைச்சர் முன்னிலையில் மதுரை சார் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். இப்பிரச்சனையை விவாதிக்க மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

தூய்மையான நகரமே மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்ற புரிதலோடு மதுரைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி குப்பை மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றின் தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட வேண்டும். மதுரையின் தூய்மை பணி பராமரிப்பு தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது குறித்தும், அதன் செயல்திறன் மற்றும் தூய்மைப் பணியாளர் நிலை உள்ளிட்ட அனைத்தும் விவாதிக்கபபட்டு உரிய முடிவெடுக்கப்பட வேண்டும்.

மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு மற்றும் தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் பங்கேற்கும் சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை பொறுப்பில் இருப்பவர்களுக்கே உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தின் தூய்மையைப் பேணிக்காக முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.