Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு துணை போவதாக என்.சி.இ.ஆர்.டிக்கு வைகோ கடும் கண்டனம்..!!

சென்னை: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு துணை போவதாக என்.சி.இ.ஆர்.டிக்கு மதிமுக

பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் - NCERT ) வெளியிட்ட 7 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தானிய ஆட்சி பற்றிய எந்தக் குறிப்பும் அளிக்கப்படவில்லை.

இதுவரை இந்தப் புத்தகத்தில் முகலாயப் பேரரசு மற்றும் டெல்லி சுல்தானியர்கள் குறித்து சுருக்கமான பாடங்கள் இருந்தன. 7 ஆம் ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில் ஐந்து தலைப்புகளின் கீழ் 12 பாடங்கள் உள்ளன. அதன் முதல் தலைப்பு ‘இந்தியாவும் உலகமும்: நிலமும் மக்களும்' என்பதாகும். அதில் மூன்று பாடங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவின் புவியியல் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, இந்தியாவின் வானிலை மற்றும் காலநிலையைப் பற்றியதாக அதன் உள்ளடக்கம் உள்ளது.

‘கடந்த கால அடுக்குகள்’ என்பது அதன் இரண்டாவது தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் இந்தப் பகுதியில் வரலாற்று விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய தொடக்கங்கள் தலைப்பில் நகரங்கள் மற்றும் அரசுகள், பேரரசுகளின் எழுச்சி, மறுசீரமைப்பின் சகாப்தம், குப்தர்களின் காலம்: முடிவில்லா படைப்பாற்றலின் காலம்' போன்றவை அதன் பாடங்களாக உள்ளன.

‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்', ‘ஆட்சி மற்றும் ஜனநாயகம்' மற்றும் 'நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார அறிவு' போன்றவை அந்தப் புத்தகத்தில் அடுத்தடுத்த தலைப்புகளாக உள்ளன. ஆனால் 2025-26 ஆண்டுக்கான என்.சி.ஆர்.டி புதிய சமூக அறிவியல் புத்தகத்திலிருந்து முகலாய மற்றும் சுல்தானிய ஆட்சிக் காலங்கள் குறித்த குறிப்புக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டன.

இதற்கு முன்பு கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்திலிருந்து முகலாயர்கள் தொடர்பான அத்தியாயங்களை என்.சி.இ.ஆர்.டி நீக்கியது. ‘இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள்' என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியில், “மன்னர்கள், வரலாறு மற்றும் முகலாய அரசவை” என்ற ஒன்பதாவது அத்தியாயம் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது.

என்சிஇஆர்டியின் எட்டாம் வகுப்பு புதிய பாடப் புத்தகம் இந்த வாரம் வெளியிடப் பட்டது. சமூகத்தை ஆராய்தல்; இந்தியா மற்றும் அதற்கு அப்பால் (Exploring Society: India and Beyond) என்ற தலைப்பில் வந்துள்ள இந்த புத்தகத்தில் டெல்லி சுல்தான்கள், முகாலயர்கள், மராத்தியர்கள் மற்றும் காலனித்துவ சகாப்தத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய என்சிஇஆர்டியின் பாடத்திட்டத்தில் முதலாவதாகும்.

புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது. போர் மற்றும் ரத்தக் களரியை முதன்மையாக கொண்ட உணர்வுபூர்வமான மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

13 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை உள்ளடக்கிய அத்தியாயம் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மறுவடிவமைத்தல், டெல்லி சுல்தான்களில் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, விஜயநகர பேரரசு, முகாலயர்கள், சீக்கியர்களின் எழுச்சி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாடப்புத்தக்கத்தில் பாபர் நகரங்களில் முழு மக்களையும் கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவுரங்கசீப் கோயில்களையும், குருத்வாராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்றும், அக்பரின் ஆட்சி கொடூரமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக பாடப்புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.