ராமதாஸ் எதிர்ப்பை மீறி நடைபயணம் செல்லும் இடமெல்லாம் அன்புமணி மீது போலீசில் புகார் கொடுங்கள்: பெயரை குறிப்பிடாமல் பாமக தலைமை உத்தரவால் பரபரப்பு
திண்டிவனம்: ராமதாஸ் எதிர்ப்பை மீறி நடைபயணம் சென்றால் போலீசில் அன்புமணி மீது புகார் கொடுங்கள் என்று பெயரை குறிப்பிடாமல் பாமக தலைமை உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி நேற்றுமுன்தினம் முதல் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த 24ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ‘பாமகவுக்கு நான்தான் தலைவர்.
என்னுடைய அனுமதியில்லாமல் செயல் தலைவர் அன்புமணி நடைபயணத்தை அறிவித்து உள்ளார். பாமக கட்சி கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. அவர் மேற்கொள்ளும் நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதே கோரிக்கையை டிஜிபி அலுவலகத்திலும் புகாராகவும் ராமதாஸ் அளித்திருந்தார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி, கமிஷனருக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பாமக தலைவர் மற்றும் நிறுவனரான ராமதாஸ் அனுமதி இல்லாமல் செயல் தலைவர் அன்புமணி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது பேரணியால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் ஆணையர்களும், காவல் கண்காணிப்பாளர்கள் இந்த நடைபயணத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது,’ என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அன்புமணியின் நடைபயணத்துக்கு டிஜிபி தடை விதித்ததாக தகவல் வெளியானது. இதை மறுத்த அன்புமணி ஆதரவாளர் வக்கீல் கே.பாலு, ‘நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. திட்டமிட்டப்படி நடைபயணம் தொடரும்’ என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், அன்புமணி நடைபயணம் மேற்கொண்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என பாமகவினருக்கு பாமக தலைமை நிலைய செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்க சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சட்டவிரோத நடைபயணத்தை தடை செய்ததற்கு காவல்துறைக்கு பாமக பாராட்டினை தெரிவிக்கிறது.
ஆனால் அதையும் மீறி நேற்று (நேற்றுமுன்தினம்) மாலை நடைபயணம் ஒன்றை (அன்புமணி பெயரை குறிப்பிடாமல்) ஆரம்பித்து ஒரு பொதுக்கூட்டத்தை நடத்திய விதம், சட்டம் ஒழுங்கு கெடும் என்ற நிலையிலும் கூட காவல்துறையினுடைய உத்தரவுக்கு ஒத்துழைக்காமல் சட்டத்தை மீறும் நபர்கள் அப்படி செய்துள்ள செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவர்கள் தடையை மீறி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாமக கேட்டுக்கொள்கிறது. தடையை மீறி எங்காவது யாராவது இப்படிப்பட்ட நடைபயணத்தை செய்தால் அதுபற்றி பாமகவினர் அப்போதே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடப்பார்களேயானால் அங்குள்ள காவல் நிலையத்தில் பாமகவினர் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.