Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக சட்டமன்ற காங். தலைவர் ராஜேஷ்குமார் சோனியா, ராகுலுடன் திடீர் சந்திப்பு: அரசியல், கட்சி நிலவரம் குறித்து விவாதிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், சோனியா, ராகுலுடன் திடீரென சந்தித்து பேசியது காங்கிரசார் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியும் அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்கக்கூடியவர்கள் ஒரு சில மாதங்களில் தங்களது ஆதரவாளர்கள் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பின்பு தற்போது வரை புதிய நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லி தலைமையிடம் செல்வப்பெருந்தகை ஒப்படைத்துள்ளார். ஆனால் அதற்கு கட்சி தலைமை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஏற்கனவே, மொத்தமுள்ள 77 மாவட்ட தலைவர்களில் 10 மாவட்ட தலைவர்கள் பதவியிடம் காலியாக உள்ளது. அந்த இடமும் இன்னும் நிரப்பப்படவில்லை. இப்படி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் அனைவரும் கோஷ்டி அடிப்படையில் செயல்படுவதால் கட்சி தலைமைக்கு போதிய ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, டெல்லி தலைமையோ, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொடங்கியுள்ளது. திறமையானவர்களை மாவட்ட தலைவர்களாக தேர்வு செய்து, அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. குஜராத், மத்திய பிரேதேசம், இமாச்சல பிரேதசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. குஜராத்தில் நடைபெற்ற இந்த திட்ட முகாமில் 10 நாள் அங்கேயே தங்கிய ராகுல்காந்தி, மாவட்ட தலைவர்கள் தேர்வை நேரடியாக கவனித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் நோக்கமே, தலைவர்களுக்கான கட்சி காங்கிரஸ் என்பதை உடைத்து, தொண்டர்களுக்கான கட்சியாக மாற்றுவது தான். கட்சியில் தீவிரப்பணியாற்றக் கூடியவர்களை நேரடியாக தேர்வு செய்து அவர்களுக்கு அதிகாரம் வழங்குவது தான் இலக்காக இருக்கும். இந்த திட்டத்தை விரைவில் தமிழக காங்கிரசிலும் செயல்படுத்த டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கவும் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற குறுகிய கால இடைவெளியே இருக்கிறது. அதற்குள் மாவட்ட தலைவர்கள் நியமனத்தை முடிவுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், கட்சியை வலுப்படுத்தவும், அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழக காங்கிரசில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் டெல்லி சென்றார். அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை இன்று காலை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலமை, செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து இருவருடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழக காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும், புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக காங்கிரசில் எழுந்துள்ளது.