சென்னை: தமிழ் வானில் பெருவேந்தன் ராஜேந்திர சோழனின் புகழ் என்றும் ஒளிரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பதிவில் கூறியதாவது;
'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை' எனவிருந்த தமிழர் எல்லையை, கங்கையும் கடாரமும் கொண்டு விரித்திட்ட செயங்கொண்டானை தலைவணங்கிடும் நன்னாள் இது.
“நித்தில நெடுங்கடல், உத்திரலாடமும்,
வெறிமலர் தீர்த்தத்து, எறிபுனல் கங்கையும்,
அலைகடல் நடுவில், கலம்பலச் செலுத்தி கங்கையும் கடாரமும் கொண்டு" பெருவேந்தனாக விளங்கிய மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் வெகு சிறப்பாக இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறுகிறது.
தனிச்சிறப்புமிக்க அருங்காட்சியகமும், சோழகங்கம் நீர்வள ஆதார மேம்பாட்டுத் திட்டமும் தந்து, முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு - வையம் போற்றிடும் அந்த மாமன்னனுக்கு இந்நாளில் மற்றுமொரு புகழ்மாலை சூட்டியுள்ளது. தமிழ் வானில் பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் புகழ் என்றும் ஒளிரும்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.