Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜராஜசோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் பிரமாண்ட சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

திருச்சி: ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு தமிழ்நாட்டில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

‘‘வணக்கம் சோழமண்டலம், சகோதர, சகோதரிகளே... நமச்சிவாயம் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’’ (தமிழில் பேசினார்). இதுராஜராஜ சோழனின் இடம். இந்த இடத்திலே அவையிலே என்னுடைய சகாவான இசைஞானி இளையராஜா அவர்களின் சிவ பக்தி இந்த மழைக்காலத்திலே இது மிகவும் சுவாரஸ்யமாக, பக்தி நிரம்பியதாக இருந்தது. நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர், இங்கே இந்த சிவகோஷத்தை கேட்கும்போது எனக்கு உள்ளுக்குள்ளே மிகவும் பரவசமாக இருக்கிறது. சிவ தரிசனத்தால் அற்புதமான சக்தி. இளையராஜா அவர்களின் இசை. ஓதுவார்களின் மந்திர உச்சாடனங்கள், உண்மையிலேயே இந்த ஆன்மிக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது. நான் இந்த சரித்திர பூர்வமான ஆலயத்திலே 140 கோடி மக்களின் நலனுக்காகவும், பாரத நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் என் வேண்டுதல்களை முன் வைத்தேன்.

சோழ அரசர்கள் தங்களுடைய அரசியல் மற்றும் வியாபார தொடர்புகளின் விரிவாக்கத்தை இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தனர். நான் நேற்று தான் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்தேன். தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இந்த பெயர்கள் பாரதத்தின் அடையாளங்கள். இன்று பாரதம் வளர்ச்சியோடு கூடிய மரபு என்ற மந்திரத்தை நோக்கி பயணித்து வருகிறது. இன்றைய பாரதம் தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாம் தேசத்தின் பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்கும் வகையில் மிகுந்த உறுத்தோடும், கருத்தோடும் வழி நடத்தி வந்துள்ளோம்.

நாம் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் அளிக்க வேண்டும். நாம் நமது கடற்படையினை பாதுகாப்பு படைகளை பலம் உள்ளவையாக ஆக்க வேண்டும். நாம் புதிய சந்தர்ப்பங்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் இவை அனைத்தோடும் கூடவே நமது விழுமியங்களையும் நன்கு பாதுகாத்து பேண வேண்டும். இந்த தேசம் இந்த உத்வேகத்தை தாங்கி முன்னேறி வருகிறது என்பது எனக்கு பெரும் உவகையை அளிக்கிறது.

இன்றைய பாரதம் நமது பாதுகாப்பை அனைத்தையும் விட பெரிதாக கருதுகிறது. யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் பாரதம் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ போது உலகமே உற்றுப் பார்த்தது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் வெளிச்சம் போட்டு காட்டியது. இந்தியாவின் வல்லமையை உலகம் தெரிந்து கொண்டு வருகிறது. நாம் அனைவரும் இணைந்து ஒரே பாரதத்திற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்து செல்வோம்.

நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில் இன்று. இங்கு மேலும் ஒரு உறுதிப்பாட்டை நான் மேற்கொள்கிறேன். வரவிருக்கும் காலங்களில் தமிழ்நாட்டிலே ராஜராஜ சோழன் அவரது மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழன் உடைய பிரமாதமான உருவ சிலையை நிர்மாணம் செய்வோம். இந்த உருவ சிலைகள் நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன தூண்களாகும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியை முடித்து கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை 4.15 மணியளவில் வந்த பிரதமர் மோடி, சிறப்பு விமானம் மூலம் 4.40 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

கங்கை நீரை கொண்டு வந்தது ஏன்?

பிரதமர் மோடி பேசுகையில், ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சோழ சாம்ராஜ்யத்தில் குடவோலை முறைப்படி ஜனநாயக வழிமுறைப்படி தேர்தல்கள் நடந்தன. மற்ற இடங்களில் இருந்து தங்கம், வெள்ளி அல்லது பசுக்கள் பிற கால்நடைகள் என்று கவர்ந்து வந்த பல அரசர்கள் பற்றி நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், ராஜேந்திர சோழனுடைய அடையாளமோ புனித கங்கை நீரை கொண்டு வந்ததில் இருக்கிறது.

ராஜேந்திர சோழன் வட பாரத்தில் இருந்து புனித கங்கையை தெற்கிலே நிரப்பினான். இந்த கங்கை நீரைக்கொண்டு இங்கு சோழகங்கை ஏரியில் இட்டு நிரப்பினான். இந்த ஏரி இன்று ‘பொன்னேரி’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை நிர்மாணமும் செய்தான். இந்த ஆலயம் இன்றும் கூட உலகின் கட்டிட கலையின் அற்புதமாக திகழ்கிறது. அன்னை காவிரி பாயும் இந்த பூமியிலே, அன்னை கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவதும் சோழப்பேரரசின் நற்கொடையாகும். அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பின்புலத்தின் நினைவினிலே மீண்டும் ஒருமுறை கங்கை நீரை காசியில் இருந்து கொண்டு வந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இங்கு நெறிப்படி அனுஷ்டானங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. புனித கங்கை நீரால் அபிஷேகங்கள் செய்யப்பட்டுள்ளன. நான் காசி மக்களின் பிரதிநிதி. கங்கை அன்னையிடமிருந்து ஆன்மிக ரீதியான அன்பு இருக்கிறது’ என்றார்.