Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் நடந்த கொடுமை பலாத்காரத்திற்கு ஆளான 11 வயது சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் பலி: ராகுல்காந்தி கடும் கண்டனம்

பாட்னா: பீகாரில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 11 வயது சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் பலியான சம்பவத்திற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஹித் குமார் சாஹ்னி (30) என்பவன், அதேபகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, தனிமையான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தான். தொடர்ந்து அந்த சிறுமியின் கழுத்தை அறுத்து, கத்தியால் குத்திவிட்டு தப்பினான். அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாணமாக கிடந்த சிறுமியை மீட்டு பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர், மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்படுவதற்கு முன் மணிக்கணக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்க வேண்டி இருந்ததாக குற்றம்சாட்டினர். முன்னதாக மற்றொரு மருத்துவமனையில் இருந்து பாட்னா மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, அவசர சிகிச்சைப் பிரிவில் இடமில்லை என்று கூறி, வேறு வார்டுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், இரண்டு மூன்று வார்டுகளில் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்ட பிறகு குழந்தைகள் பிரிவுக்கு சிறுமி அனுப்பப்பட்டதாகவும், சில அரசியல்வாதிகள் தலையிட்ட பிறகே மாலை 5 மணியளவில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறினர்.

இருந்தும் சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியதாதால் பரிதாபமாக உயிரிழந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘மிகவும் வெட்கக்கேடானது; உரிய நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். குற்றவாளிகள் மற்றும் பொறுப்பற்ற அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் இந்திரசேகர் தாக்கூர் கூறுகையில், ‘மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமி மே 26ம் தேதி சனிக்கிழமை மதியம் 1.23 மணிக்கு முசாஃபர்பூரில் இருந்து ஆம்புலன்ஸில் இங்கு கொண்டுவரப்பட்டார். மருத்துவர்கள் அவரை இஎன்டி பிரிவுக்கு அனுப்ப அறிவுறுத்தினர். மருத்துவமனையில் இருந்த கூட்டம் காரணமாக, மருத்துவர்கள் ஆம்புலன்ஸிலேயே சிறுமியை பரிசோதித்தனர்.

காயங்கள் இருந்ததுடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இஎன்டி பிரிவில் ICU இல்லாததால், மாலை 3.43 மணிக்கு மகப்பேறு மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணியளவில் அவர் உயிரிழந்தார்’ என்றார். முன்னதாக சம்பவம் நடந்த நாளன்று இரவு குற்றவாளி ரோஹித் குமார் சாஹ்னியை போலீசார் கைது செய்தனர்.