Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகுல் காந்தியின் சாதி குறித்த சர்ச்சை பேச்சை பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

* மக்களவையில் காங். எம்பி சன்னி தாக்கல்

* எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ராகுல் காந்தியின் சாதி குறித்து மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ எம்பி அனுராக் தாக்கூரின் பேச்சை சமூக ஊடகத்தில் பகிர்ந்தது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மான நோட்டீசை காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் சன்னி மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய பாஜ எம்பி அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியின் சாதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை அவமதியுங்கள். ஆனால் இதே அவையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான சட்டத்தை இயற்றுவேன்’’ என பதிலளித்தார். ராகுலின் சாதி குறித்த அனுராக் தாக்கூர் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அனுராக் தாக்கூரின் நீக்கப்பட்ட பேச்சு அடங்கிய வீடியோவை பிரதமர் மோடி தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்து, ‘இதை கட்டாயம் கேளுங்கள்’ என பதிவிட்டு அனுராக் தாக்கூரையும் பாராட்டி இருந்தார்.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும் ராகுலின் சாதி குறித்து பேசியதற்காக அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு நடுவே கேள்வி நேரம் நடத்தப்பட்டது. அப்போது பல எம்பிக்களும் காகிதங்களை கிழித்தெறிந்தும், அவையின் மையப்பகுதியை முற்றுகை யிட்டும் கோஷம் எழுப்பியதால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. 11.40 மணி வரை அமளி நடுவே கேள்வி நேரம் நடத்தப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணி வரை அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பின்னர் பிற்பகலுக்குப் பிறகு அவை கூடியதும், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் சன்னி உரிமை மீறல் தீர்மான நோட்டீசை சபாநாயகரிடம் அளித்தார். அதில் அவர், ‘அவையிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளின் ஒரு பகுதியை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அவை நடத்தை விதி 222ன் கீழ் உரிமையை மீறி உள்ளது. நடத்தை விதிகளின் படி இது உரிமை மீறலுக்கு சமம். இதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமைமீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

சாதியை கேட்டதில் என்ன தவறு?

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘ எங்கு சென்றாலும் சாதியைப் பற்றி பேசி சாதி ரீதியாக நாட்டை பிரிக்க காங்கிரஸ் சதி செய்கிறது. மக்களின் சாதி என்னவென்று அவர்கள் கேட்கலாம், ஆனால் அவர்கள் என்ன சாதி என்று கேட்டால் குற்றமா? இது என்ன நியாயம்? ராகுலும், அகிலேஷும் நாட்டைவிடவும், நாடாளுமன்றத்தை விடவும் மேலானவர்களா? அதை பாஜ ஒருபோதும் அனுமதிக்காது ’’ என்றார்.