Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாங்களும் டெக்னாலஜியை யூஸ் பண்ணுவோம்; க்யூஆர் கோடு மூலம் பிச்சை எடுக்கும் யாசகர்

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் க்யூஆர் கோடு மூலம் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பணம் அல்லது காகிதம் இன்றி தொழில்நுட்பம் மூலம் நடைபெறும் சேவையாகும். இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை விரிவுபடுத்தவும், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை வெவ்வேறு முறையில் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரிடம் தற்போது ஸ்மார்ட் போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் பணத்தை கையில் வைத்துக்கொள்ளாமல் ஸ்மார்ட் போன்களுடன் கடைக்கு செல்கின்றனர். அங்கு பொருட்களை வாங்கி கொண்டு அங்குள்ள க்யூ ஆர் கோடுகளை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து தங்களது வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை செலுத்திவிடுகின்றனர்.

இதேபோல் அரசு பஸ்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரிய வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மட்டுமின்றி சிறிய மளிகை கடைகள், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் என அனைத்து கடைகளிலும் வியாபாரிகள் க்யூ ஆர் கோடுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நாங்களும் பயன்படுத்துவோம் என நிரூபித்து காட்டியுள்ளார் பிச்சை எடுக்கும் ஒரு யாசகர். இதுபற்றிய விவரம்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது ஆண். இவர் வாணியம்பாடி பஸ் நிலையம், புத்துக்கோயில் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிச்சைகேட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். பிச்சை கேட்கும்போது பொதுமக்கள் சிலர் சட்டை பாக்கெட்டை தொட்டு பார்த்துவிட்டு சில்லரை இல்லை என கூறிவிட்டு செல்வது வழக்கம். இதேபோல் பலரும் காசு தராமல் சென்றுவிடுகின்றனர். இதனால் என்ன செய்வது என்று யோசித்த இந்த யாசகர், தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றார்போல் தன்னுடைய பிச்சை எடுக்கும் தொழிலையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக க்யூஆர் கோடு டிஜிட்டல் கார்டை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பிச்சை கேட்டு வருகிறார். தர்மம் செய்ய மனமிருந்தும் கையில் சில்லரை இல்லாத பொதுமக்கள், க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து பிச்சையெடுக்கும் யாசகர் கூறுகையில், என்னிடம் 3 வங்கிகளில் ேசமிப்பு கணக்கு உள்ளது. பிச்சை எடுக்கும் பணத்தை அதில் சேமித்து வருகிறேன். 3 வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி தேவைப்படும்போது பணத்தை எடுத்துக்கொள்வேன். பலர் தற்போது கையில் பணம் வைத்திருப்பதில்லை. பிச்சைகேட்டால் சில்லரை இல்லை என கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால்தான் எனக்கென க்யூஆர் கோடு அட்டையை வாங்கி பிச்சை கேட்கிறேன். பொதுமக்களும் ஸ்கேன் செய்து ரூ.10, ரூ.20 என செலுத்திவிட்டு செல்கின்றனர்’ என்றார். யாசகம் கேட்பவரின் இந்த செயலை ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள், எல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் செயல் என்று கூறிச்செல்கின்றனர்.