Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புளியடி பனைகுளத்தில் அனுமதியின்றி மண் எடுப்பு: அதிகாரிகள் நேரில் விசாரணை

நாகர்கோவில்: நாகர்கோவில் புளியடியில் உள்ள பனைகுளத்தில் அனுமதியின்றி மண் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள குளங்களில் உள்ள வண்டல் மண், களிமண்ணை எடுக்க விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் வருவாய்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து இலவசமாக எடுக்க அரசாணை வெளியிட்டு உள்ளது. எந்தெந்த குளங்களை தூர்வாரலாம் என்ற பட்டியலும் வெளியிட்டு இருக்கிறது. இதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பல குளங்கள் தூர்வாரப்பட்டது. தற்போது மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடந்துள்ளது. அறுவடை முடியும் வரை குளங்களில் உள்ள தண்ணீரை சேமித்து வைத்து அதன் பிறகு, தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் நாகர்கோவில் புளியடியில் உள்ள பனைகுளத்தில் எந்த வித அனுமதியுமின்றி வண்டல், களிமண் எடுக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மண் எடுத்து செல்வதால், புளியடி சாலை மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து புளியடி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: நாகர்கோவில் அருகே உள்ள புளியடியில் பனைகுளம் உள்ளது. இந்த குளம் மூலம் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது. தற்போது குளம் மூலம் பாசன வசதி பெறும் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஒரு சிலர் அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் பனைகுளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி கடந்த ஒரு வாரமாக மண் எடுத்து வருகின்றனர். டிராக்டர்கள் மூலம் மண் எடுக்கப்பட்டு வருவதால், புளியடி புத்தேரி சாலையில் மண்கொட்டியுள்ளது.

சாலையில் களிமண் கொட்டி கிடப்பதால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. பனைகுளத்தில் இருந்து மண் எடுத்தநபர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மண்ணை பதுக்கி வைத்து உள்ளனர். இந்த மண் பிளாட் போடுவதற்கு பயன்படுத்த வைத்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வருக்கும், கலெக்டருக்கு புகார் கொடுத்துள்ளோம். குளத்தில் அனுமதியின்றி மண் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தநிலையில் பனைகுளத்தில் அனுமதியின்றி மண் எடுக்கப்பட்டு வருவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பனைகுளத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அனுமதியின்றி மண் எடுத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பனைகுளம் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால், நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.