புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்று வரும் பந்த் போராட்டத்தின் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோ, டெம்போக்களும் சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடத்த போவதாக அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பந்த் போராட்டம் இன்று காலை தொடங்கியது. போராட்டத்தின் காரணமாக நகரத்தின் முக்கிய வீதிகளான காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சிலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள், ஒரு சில அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் பேருந்துகள் மாநில எல்லையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது. அதேபோன்று நகரப் பகுதியில் இயக்கப்பட்டு வரும் டெம்போ மற்றும் ஆட்டோக்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள். பந்த் போராட்டத்தின் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும் பந்த் போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நகர பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் காலை 11 மணிக்குள் அனைத்து துறைகளிலும் பணிக்கு வராத ஊழியர்களின் பெயர் பட்டியலை தலைமைச் செயலகத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.