Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று மாலை போராட்டம், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்: பதவி நீட்டிப்பு பெற்ற துணைவேந்தருக்கு எதிராக தீர்மானம்

சேலம்: பதவி நீட்டிப்பு பெற்றுள்ள துணைவேந்தருக்கு எதிராக, பேராசிரியர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. பேராசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்க தலைவர் கனிவண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி நீட்டிப்புக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு, பழனிசாமி ஐஏஎஸ் அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும். ஆட்சிக் குழுவை கூட்டி சிறப்பு நிதி தணிக்கைக் குழு அளித்துள்ள அறிக்கையை, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பரிந்துரைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீர்கெட்டு கிடக்கும் பல்கலைக்கழகத்தை காப்பாற்ற பொறுப்பு பதிவாளரை நீக்கிவிட்டு, ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை நியமிக்க வேண்டும். துணைவேந்தருக்கு வழங்கியுள்ள பதவி நீட்டிப்பை தமிழ்நாடு அரசுக்கு விடப்பட்ட சவாலாகவே இந்த கூட்டியக்கம் கருதுகிறது. எனவே சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி, இந்த பதவி நீட்டிப்பை ரத்து செய்ய அரசு சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து முறையிடுவது, பதவி நீட்டிப்பை கண்டிக்கும் வகையில் அறவழி போராட்டங்களை முன்னெடுப்பது எனவும், முதற்கட்டமாக இன்று மாலை பல்கலைக்கழக வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சட்ட ஆலோசகரின் ஆலோசனையை பெற்று, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், தோழமை சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.