பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம்: இருநாட்டு உறவு, வர்த்தகம் குறித்து ஆலோசனை
மாலி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், பிரதமர்கள் மோடி, ஸ்டார்மர் முன்னிலையில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் சார்லசை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு மாலத்தீவு புறப்பட்டார். இன்று தனி விமானம் மூலம் மாலத்தீவு சென்றடைந்தார். 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாடு அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் நாளை நடைபெறும் மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையடுத்து மாலத்தீவு பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி நாளை மாலை டெல்லி வருகிறார்.