பிரதமர் மோடி, அமித்ஷா புறக்கணிப்பு எதிரொலி ஒன்றிய அரசு மீது ஓபிஎஸ் திடீர் தாக்கு: பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம்?
சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் விரக்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பாஜ கூட்டணியில் இருந்தும் வெளியேற அவர் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை மிகவும் வலுவான கூட்டணியாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜ இணைந்து போட்டியிடும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை வந்தபோது அறிவித்தார். இருப்பினும், கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜ தலைவர்கள், எடப்பாடி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜ தவிர பாமக, தேமுதிக கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை. அதேநேரம், பாஜ-அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைய வேண்டும், ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக கட்சியின் முன்னணி தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை, அதேபோன்று சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி சேர்க்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு தற்போது டெல்லி பாஜ தலைவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவே கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், சுமார் ரூ.450 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை, பிரதமர் மோடி திறந்து வைக்க கடந்த சனிக்கிழமை இரவு தூத்துக்குடி வந்தார். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து இரவே திருச்சி வந்தார். திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வரவேற்றார். ஆனால், பிரதமரை தனியாக சந்தித்து பேச எடப்பாடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதேநேரம், முன்னாள் முதல்வரும் அதிமுகவில் இருந்து கழட்டிவிடப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தூத்துக்குடியில் வைத்து மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் அவர்களை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே, இபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரிடையே அரசியல்ரீதியான மோதல் நீடித்து வரும் சூழலில், இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்காததால், அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பலரும், இனியும் பாஜ கட்சியையோ அல்லது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நம்பி பலன் இல்லை. அதிமுகவில் இதுவரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தும், எந்த பலனும் இல்லை. நாம் யார் என்பதை வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அணியினருக்கு புரியவைக்க வேண்டும்.
அதனால் 2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் காண வேண்டும் அல்லது அதிமுக - பாஜ இல்லாத புதிய கட்சிகளுடன் கூட்டணி சேர வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றிய அறிவிப்பை இன்று அல்லது இன்னும் ஒன்றிரண்டு நாளில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக ஒன்றிய பாஜ அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவித்தும், அறிக்கை வெளியிட்டும் வந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-25ம் ஆண்டு சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ரூ.2,151 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.
மேலும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 சதவீத மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒன்றிய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னை.
இந்த காரணத்தை சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழை எளிய மாணவ,
மாணவிகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதை கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-25ம் ஆண்டிற்கான ரூ.2,151 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 சதவீத மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
* கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.
* ஒன்றிய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னை.