Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சியில் நாளை 8 கிமீ தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ: எஸ்பிஜி கட்டுப்பாட்டில் விமான நிலையம், ஓட்டல் 300 கடைகள் அடைப்பு, கலெக்டர் அலுவலக சாலை மூடல்

திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் இருந்து இரவு 10.30 மணி அளவில் திருச்சிக்கு வருகிறார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார். அப்போது ஓட்டலில் இருந்து வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, நீதிமன்றம், தலைமை தபால் நிலையம் வழியாக விமான நிலையம் வரை சுமார் 8 கிமீ தூரம் பிரதமர் ரோடு ஷோ செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூரில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் ஓட்டலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.ஜி. அதிகாரிகள் விமானம் மூலம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் வானில் வட்டமடித்தபடி ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். விமான நிலைய ஊழியர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல பிரதமர் தங்கும் தனியார் ஓட்டலிலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் எஸ்.பி.ஜி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் தங்கும் ஓட்டலுக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நான்கு ரோட்டில் இருந்து, வெஸ் ட்ரி பள்ளி ரவுண்டானா வரை பேரிகார்டு தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வரை மட்டும் மக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் யாரும் அந்த வழியாக செல்ல முடியாது. பிரதமர் வந்து செல்லும் திருச்சி-புதுக்கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, குட்ஷெட் மேம்பாலம் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் வெளியில் தெரியாதபடி சாமியானா பந்தல் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை மதியம் வரை மூட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் சுப்பிரமணியபுரம் முதல் ஏர்போர்ட் வரை, கலெக்டர் அலுவலக சாலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பொன்னேரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்து பொன்னேரியில் இறங்க உள்ளார். அங்கு நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் இன்று ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை நடைபெற்றது. மூன்று முறை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடந்தது.