சென்னை : இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை புரிகிறார். பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கை மனு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார். இந்த மனுவினை நிதி, சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் அளிக்க உள்ளார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குறிப்பினர் கனிமொழி மற்றும் முதல்வரின் செயலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இது தொர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் மருத்துவமனையில் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இந்த மனுவை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமரிடம் வழங்குவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.