Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

3,915 பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 11.48 லட்சம் பேர் எழுதினர்: ஒரு பதவிக்கு 293 பேர் போட்டி, 3 மாதத்தில் ரிசல்ட், டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது. 3915 பதவிகளுக்கு 11.48 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 293 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தேர்வுக்கான ரிசல்ட் 3 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டது.

அதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தேர்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 743 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேர், பெண்கள் 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேர், மூன்றாம் பாலினத்தவர் 117 பேர் அடங்குவர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 314 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 4922 தேர்வு கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 311 இடங்களில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வை 94 ஆயிரத்து 848 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது.

இத்தேர்வு 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி ”அ”வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களும், பகுதி ”ஆ’’வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு மனக்கணக்கில் 25 வினாக்கள் என 100 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம்பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர்.

தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடந்த அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘‘குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் என்பது 3 மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு 4 மாதங்களுக்கு பின்பு தான் தேர்வின் முடிவை வெளியிட்டிருந்தோம்.

இந்த முறை பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளதால் மூன்று மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட உள்ளோம். குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வரும் வரை காலி பணியிடங்கள் சேர்க்கப்படும். அதனால், பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் கூடுவதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.

* 2.41 லட்சம் பேர் ஆப்சென்ட்

குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தத்தில் தேர்வை 82.61 சதவீதம் பேர் எழுதினர். 17.39 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது 2 லட்சத்து 41,719 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குரூப் 4 தேர்வில் ஒரு பதவிக்கு 293 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.