சென்னை: சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி சாலையில் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதியது லாரியால் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பெண் உட்பட இருவரும் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓடும் தண்ணீர் லாரி நாள்தோறும் சென்னீர்குப்பம் பகுதியில் தண்ணீர் நிரப்ப வருவது வழக்கம். அந்த வகையில் இன்று தண்ணீர் லாரி வந்து இருக்கிறது. அப்போது தண்ணீர் நிரப்பி கொண்டு ஆவடி - பூவிருந்தவல்லி சாலை வழியாக செல்லும் போது லாரி தாறுமாறாக ஓடி அங்கு சாலையில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. லாரி ஓட்டுநரை பிடித்த அப்பகுதி மக்கள் அவரை கம்பத்தில் கட்டி வைத்தனர். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.