Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில், தொடரும் கோடைமழையால் கொப்பரை மற்றும் நார் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் அதிகளவு மட்டைகள் தேக்கமடைந்துள்ளது என உற்பத்தியாளர்கள் கடும் கவலையுடன் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார், கோட்டூர், கோமங்கலம், நெகமம், கிணத்துக்கடவு, வடக்கிபாளையம், கோபாலபுரம், கஞ்சம்பட்டி, ராமபட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகளவில் நடக்கிறது.

இதனால் இப்பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களன்கள் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது உலர் களங்களில் தொடர்ந்து கொப்பரை உலர வைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் (2024) கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், களங்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தொடர்ந்திருந்தது. வெளி மார்க்கெட்டில் விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து விவசாயிகளுக்கு ஓரளவு மழை கிடைத்தது. மேலும், தொழிற்சாலைகளில் நார் உற்பத்தியும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால், களங்களில் கொப்பரை மற்றும் நார் உலர வைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் பகல் நேரத்தில் அவ்வபோது மழைப்பொழிவு இருந்ததால் களங்களில் கொப்பரையை உலரவைக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அதிலும் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் விட்டு, விட்டு கனமழை பெய்வதால் கொப்பரை உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

அதுபோல, தொழிற்சாலைகளில் தென்னை மட்டையை பிரித்து நார் உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர். மேலும் தொழிற்சாலைகளில் நார் பிரித்து எடுப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள மட்டைகள் அதிகளவு தேக்கடைந்தது. வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதால் தொடர்ந்து நார் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில்தான் நார் உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நார் உற்பத்தி அதிகரிக்கும்.

சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து டன் கணக்கில், இந்தியாவின் கேரள, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, பருவமழை போன்று கோடை மழையும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் களங்களில் நார் உலர வைக்க முடியாமல் உள்ளது. ஈரக்காற்று அடிப்பதால், உலரவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நார் ஏற்றுமதி குறைந்து, விற்பனை மந்தமடைந்துள்ளது. மேலும், நார் பிரித்து எடுப்பதற்காக தொழிற்சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மட்டைகள் அப்படியே தேக்கமடைந்துள்ளது. மழைப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் இருக்கும் வரை உற்பத்தி பாதிக்கப்படும்’’ என தெரிவித்தனர்.