கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் இவரது மகள் அஸ்விதா (19) இவர் கோவை மலைமுச்சம்பட்டி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி அஸ்விதாவை ஒருதலை காதலாக ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அஸ்விதா வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சிஸ்டி சிங் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் மாணவி தனியாக வீட்டில் இருந்த போது வீட்டிற்கு வந்து சென்ற நபர் யார் என்பதும் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் வடுகபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.