காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரை..!!
சென்னை: காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. காவலர் - பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும் புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், காவல்துறையில் ஒருமைப்பாட்டை உருவாக்க பல பரிந்துரைகளை தமிழ்நாடு 5ம் போலீஸ் ஆணையம் பரிந்துரைத்து இருக்கிறது. அதில், காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க அரசுக்கு தமிழ்நாடு போலீஸ் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சாதி பற்றிய தகவல்கள் மதிப்பீட்டில் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் நீக்க வேண்டும். தற்காலிக ஊழியர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கான ACR படிவங்களில் சாதி குறிப்பை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.