Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமகவின் வேரும், வியர்வையும் தைலாபுரத்தில்தான் உள்ளது அன்புமணி நடைபயணம் மக்கள் ஏற்கமாட்டார்கள்: ஒரே தலைவர் நான்தான்; ராமதாஸ் பரபரப்பு பேட்டி

திண்டிவனம்: பாமகவின் வேரும், வியர்வையும் தைலாபுரத்தில்தான் உள்ளது. அன்புமணியின் நடைபயணத்தால் துளியும் பயனில்லை, மக்களும், தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பாமகவுக்கு ஒரே தலைவன் நான்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும்தான் இருக்கிறது. ஒரே தலைமை தான், ஒரே தலைவர் தான். தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யார் எந்த யாத்திரை போனாலும் துளியும் பயனில்லை.

தொண்டனும், மக்களும் அதை ஏற்க மாட்டார்கள், பார்க்க மாட்டார்கள். காவல்துறை தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாமும் தெரியும். முறைப்படி புகார் மனு கொடுத்திருக்கிறோம். ஊடகங்களுக்கும் ஒன்றை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் என்ற பெயரோடு, அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள், பதிவு செய்யாதீர்கள். பாமக நிறுவனர், தலைவராக தைலாபுரத்திலிருந்து ராமதாஸ் இதை சொல்கிறேன்.

தமிழகத்தில் 3வது அணி என்று இல்லை, 4வது, 5வது, 6வது அணிகூட வரட்டும். ஏன் மூன்றோடு நிறுத்தி விட்டீர்கள். பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்கு வருவார் அடிக்கடி வருவார். அது நல்லது தானே?. ராஜ ராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஒட்டுக்கேட்கும் கருவியை கிளியனூர் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்துள்ளோம். அது என்னாச்சு என்று தெரியவில்லை. நமது தமிழக சைபர் கிரைம் போலீசார் இந்திய அளவில் மிக திறமையானவர்கள். அவர்கள் நினைத்தால் 2 நாளில் கண்டுபிடிக்கலாம்.

எனக்கு இதுவரை அவர்கள் மூலமாக எந்த தகவலும் வரவில்லை. காவல்துறை மூலமாகவும் வரவில்லை. அதனால் விரைந்து அதை யார் வைத்தார்கள் எதற்காக வைத்தார்கள் என்பதை அவர்கள் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு முடிந்துபோன விஷயத்தை ஊதிஊதி பெருசா ஆக்குகிறார்கள். எடப்பாடி பழனிசாமி சரியான கருத்துதான் சொல்லியிருக்கிறார். சமூக வலைதளம் முடங்கியுள்ளது குறித்து சட்டப்படி என்ன செய்யனுமோ அதை செய்யனும்.ஆணவக்கொலை பற்றி புரிதல் இல்லை. அதைப் பற்றி அடுத்த வாரம் உங்களுக்கு புரிய வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘உங்கள் கட்டளையை மீறி நடைபயணம் போகிறார்கள். இதனால் கட்சி ரீதியாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதா’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘அதெல்லாம் தேவை இல்லாதது. நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். ஊடகங்கள் மூலமாக சொன்னாலே போதும்’ என்றார். ‘அன்புமணி நடைபயணம் குறித்து டிஜிபியிடம் மனு அளித்துள்ளீர்கள். தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று பதில் அளித்தார்.