Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி கட்சி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கம்

திண்டிவனம்: பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில் இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். 2026 ஜூன் வரை அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், கட்சியின் ஏ-பார்ம், பி-பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் பாமக இரண்டாக பிளவுபடும் சூழல் நிலவுகிறது.

இதனிடையே நேற்று விழுப்புரத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து அன்புமணி தரப்பு பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அக்கட்சியின் எம்எல்ஏக்களும், அன்புமணியின் ஆதரவாளர்களுமான சிவக்குமார் (மயிலம்), வெங்கடேஷ்வரன் (தர்மபுரி), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் ெபாறுப்பில் இருந்து உடனடியாக நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இதேபோல் வழக்கறிஞர் பாலும் தடாலடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.

3 பேரின் நீக்கத்துக்கான காரணமாக கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அனுமதியோ, உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் சட்டமன்ற உறுப்பினரோ, மற்றவர்களோ தன்னிச்சையாக செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.ராமதாசின் இந்த அதிரடி நடவடிக்கையால் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும், நிர்வாகிகளும் தற்போது கதிகலக்கத்தில் உள்ளனர். அடுத்ததாக அவர்களையும் மாவட்டம், நகரம், ஒன்றியம் வாரியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவு வெளியாகலாம் என ராமதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமதாசின் இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் பாமகவை முழுமையாக சாகும் வரையில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பது தெளிவாகி உள்ளது. குடும்ப விவகாரத்தை கட்சிக்குள் கலக்காமல் தனியாக கட்சி பிரச்னைகளை முன்னெடுத்து செல்வதன்மூலம் அவருக்கான ஆதரவும் படிப்படியாக அதிகரித்தபடியே உள்ளது. இதனால் வரவுள்ள பொதுத்தேர்தலில் பாமகவுடன் கூட்டணி பேசுவதற்கு ராமதாசை பிறகட்சிகளின் தலைவர்கள் சந்திக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தலைமை நிலைய செயலாளர் எங்களை நீக்க முடியாது; சிவக்குமார் எம்எல்ஏ பேட்டி:

பாமகவில் இருந்து நீக்கப்பட்ட மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் கூறுகையில், கட்சியில் இருந்து எங்களை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது. ஆனால் தலைமை நிலைய செயலாளருக்கு எங்களை நீக்குவதற்கான அதிகாரம் இல்லை. அவரை அப்பதவியில் இருந்து ஏற்கனவே எங்கள் தலைவர் அன்புமணி நீக்கி புதிய நபரை போட்டுவிட்டார். ராமதாஸ் அல்லது அன்புமணி மட்டுமே நேரடியாக எங்களை நீக்கலாம். ஆனால் ஒரு தலைமை நிலைய செயலாளரால் சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க முடியாது. திமுக, அதிமுக என ஒவ்வொரு கட்சிகளில் வெவ்வேறு நடைமுறை பின்பற்றப்படுகிறது. எங்களை நீக்கும் தகுதி அன்பழகனுக்கு இல்லை. அவர் எந்த கட்சியிலிருந்து வந்தார், எங்கிருந்தார் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும். சென்னையில் நாளை தலைவர் அன்புமணியை சந்திக்க பேச இருக்கிறோம். அதன்பிறகு எங்களது நிலைப்பாட்டை முறைப்படி தெரிவிப்போம் என்றார்.