Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திண்டிவனத்தில் நடந்த பாமக செயற்குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்: அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம்: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாரா?

விழுப்புரம்: திண்டிவனத்தில் நடந்த பாமக செயற்குழுவில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிப்பது உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அன்புமணி கட்சியில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று பாமக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலில் கட்சியை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிவையில் திண்டிவனத்தில் பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு நேற்று கூடியது.

இக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையது முகம்மது உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மகளிர் அணி சுஜாதா கருணாகரன், அருள் எம்எல்ஏ, சமூகநீதி பேரவை வக்கீல் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒரு சில மாவட்ட தலைவர்கள் மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் அன்புமணிக்கு கண்டனம் தெரிவிப்பது, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சி நிறுவன மாண்பை மீறியதோடு, நிறுவனரே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பொறுப்பற்ற பதிலை சொல்லி பொதுவெளியில் அவருடைய பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயலுக்கு செயல் தலைவர் வருத்தம் கேட்டுக் கொள்வது மட்டுமல்லாமல், பொது வெளியில் கட்சிக்கு மட்டும் களங்கம் விளைவிக்காமல், நிறுவன தலைவருக்கும் களங்கத்தை உருவாக்கும் வகையில் செய்துள்ள செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை யார் செய்தாலும் அவர்களை கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் என்பதை செயற்குழு முடிவெடுத்து நிறுவன தலைவராக உள்ளவருக்கு அங்கீகாரம் வழங்கி தீர்மானிக்கப்படுகிறது. பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் 30.5.2025 அன்று பதவியேற்றது முதல் அவருடைய நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடுவார்களானால் அது சட்டப்படி மட்டுமல்லாமல், கட்சி விதிகளுக்கு முரணானது என்றும், மாநில தலைவர் மற்றும் நிறுவனர் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஏற்பாடு செய்ய செயற்குழு மூலமாக தீர்மானிக்கப்படுகிறது.

புதிய தலைவராக ராமதாஸ் பொறுப்பேற்று கொண்ட வகையில், கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து அயராது உழைத்து பாடுபட முடிவு செய்திருப்பதால் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தலைமை பொறுப்போடு நிறுவன பொறுப்பையும் திறம்பட செய்ய புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்ற தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை, கட்சியின் சின்னத்தை திரும்ப பெற்று வீறு நடை போட வேண்டுமானால் நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை உடனடியாக விசாரித்து தீர்வுகளை அடைய வேண்டும்.

என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. அதன்படி, அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்தே நீக்குவதற்கு அறிவிப்பு வெளியாகலாம் என பாமக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

* அன்புமணியின் படம் தவிர்ப்பு முன்னிறுத்தப்பட்ட காந்திமதி

திண்டிவனத்தில் நேற்று நடந்த பாமக செயற்குழுவில் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணியின் பெயர், புகைப்படம் எதுவும் இடம் பெறவில்லை. அண்மையில் தைலாபுரம் தோட்டத்திலிருந்தும் அன்புமணியின் புகைப்படம் இடம்பெற்ற பேனர், சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாமக செயற்குழுவில் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி பங்கேற்று, மேடைக்கு முன்பாக கீழே முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தார். அவரை ராமதாஸ் மேடைக்கு அழைத்தார். மேடையிலேயே அவருக்கு நாற்காலி போடப்பட்டு உட்கார வைத்த ராமதாஸ், தன்னுடைய பல போராட்டங்களுக்கு பின் காந்திமதி இருந்ததாகவும் அவரை கட்சியினரிடையே முன்னிறுத்தி பேசினார்.

* கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம்

பாமக செயற்குழுவில் தேர்தல் கூட்டணி முடிவெடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4வது தீர்மானத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் நம்முடைய கட்சியின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் நாமும் கூட்டாக பங்குபெற்று மக்கள் பணி செய்வதற்கு ஏதுவாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும், 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கு கடந்த கால வழக்கம்போல தற்போது முழு அதிகாரம் அளிக்கப்படுவது, 2026 சட்டமன்ற தேர்தல் பணியை இப்போதே ஆரம்பிப்பதற்கும், வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கும், கூட்டணி அமைந்தபிறகு எந்தெந்த இடத்தில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது அங்கு சீட்டுகளை பெற்று அதில் வேட்பாளர்களை ஒரு குழு மூலமாக தேர்வு செய்து நிறுத்தும் முடிவை ராமதாசே செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தேர்தலில் போட்டியிட ஏ.பார்ம், பி.பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்கே

பாமக மாநில செயற்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘96 ஆயிரம் கிராமங்கள் சென்று கட்சியை வளர்த்திருக்கிறேன் என் வலியை புரிந்தவர்கள், உணர்ந்தவர்கள் 99 சதவீதம் பேர் இங்கே வந்திருக்கிறார்கள். மீதி உள்ளவர்கள் வீட்டில் இருந்தே ஆதரவு அளிக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ளதால், அதற்கான அதிகாரத்தை நிர்வாக குழு மற்றும் செயற்குழு எனக்கு வழங்கி உள்ளது. எனவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தான் துவங்கி விட்டதால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுக்க ஆயத்தமாகுங்கள்.

2026 சட்டமன்ற தேர்தலை கூட்டணியில் தான் பாமக சந்திக்கிறது. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் ஆணைய விண்ணப்ப படிவமான ஏ.பார்ம், பி.பார்மில் கையெழுடுத்திடும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. உங்களுக்குள்ள சந்தேகம் அனைத்தும் இப்போது போய் இருக்கும். எங்கே செல்வது என காத்திருந்தவர்களுக்கு இப்போது சந்தேகம் தீர்ந்திருக்கிறது. சந்தேகப்பட்டவர்களுக்கு மருந்து கிடைத்திருக்கிறது. இங்கு வந்தவர்களுக்கு விருந்து கிடைத்துள்ளது’ என்றார்.