Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் ஓடுபாதையில் தொழில்நுட்ப கோளாறால் நின்ற விமானம்: அதிகாரிகள் இன்று விசாரணை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் துபாய் செல்லும் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென பிரதான ஓடுபாதையில் நின்றுவிட்டது. இதனால் 2வது ஓடுபாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து இன்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்துக்கு நாள்தோறு காலை 8.15 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்து சேரும். பின்னர் இங்கிருந்து காலை 9.50 மணியளவில் மீண்டும் பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று வழக்கம்போல் சென்னை சர்வதேச விமான முனையத்தில் இருந்து காலை 9.50 மணியளவில் சுமார் 240 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் துபாய்க்கு கிளம்பியது.

இந்த விமானம் வழக்கம்போல் ஓடுபாதையில் வடக்கு திசையில் சென்னை நோக்கி சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் தெற்கு திசை நோக்கி திரும்பி வந்து, டேக்-ஆப் ஆகி வானில் பறக்கத் தொடங்கும். அதேபோல் அன்றைய தினம் வடக்கு திசை நோக்கி சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையிலேயே தெற்கு திசை நோக்கி திரும்பாமல், திடீரென அப்படியே நீண்ட நேரமாக நின்றுவிட்டது. இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு விமான கேப்டன் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை இழுவை வாகனம் மூலம் பராமரிப்பு பணியாளர்கள் இழுத்து வந்து, அந்த விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தினர். பின்னர் அந்த விமானத்தின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு, காலை 11.10 மணியளவில் சென்னை சர்வதேச விமான முனையத்திலிருந்து துபாய்க்குப் புறப்பட்டு சென்றது.

இதனால் சென்னை விமானநிலையத்தில் காலை 10 முதல் 11.10 மணிவரை பிரதான ஓடுபாதையில் பிற விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அந்நேரத்தில் பிற விமானங்களின் புறப்பாடு, வருகை ஆகிய அனைத்தும் அங்குள்ள 2வது ஓடுபாதையிலேயே இயக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணிகளில் சிலர், டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனுக்கு புகார் தெரிவித்தனர். அதோடு, சென்னை விமான நிலையத்தில் இதேபோல் அடிக்கடி விமானங்கள் தாமதமாவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தின் முதலாவது பிரதான ஓடுபாதையில் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக இயக்கப்படாதது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.