திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் உள்ள நண்பருக்கு கொடுத்து அனுப்பிய ஊறுகாய் பாட்டிலில் எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பக்கத்து வீட்டு வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே சக்கரக்கல் பகுதியை சேர்ந்தவர் மிதிலாஜ். சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். நேற்று மீண்டும் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜிசின் என்ற வாலிபர், சவுதி அரேபியாவில் உள்ள தன்னுடைய நண்பருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ஒரு ஊறுகாய் பாட்டிலை கொடுத்துள்ளார். அதை மிதிராஜ் வாங்கி வைத்தார். சிறிது நேரம் கழித்து ஊறுகாய் பாட்டிலை பேக்கில் வைப்பதற்காக எடுத்தபோது அதில் சீல் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் பாட்டிலில் இருந்த ஊறுகாயை வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது அதில் ஒரு சிறிய பிளாஸ்டிக் கவர் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மிதிலாஜ் இதுகுறித்து உடனடியாக சக்கரக்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பிளாஸ்டிக் கவரை பிரித்துப் பார்த்தனர். அப்போது அதில் 2.6 கிராம் எம்டிஎம்ஏ வும், 3.4 கிராம் ஹாசிஷ் ஆயிலும் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் போதைப்பொருளை கொடுத்த ஜிசினையும் (28), அவரது கூட்டாளிகளான அர்ஷாத் (31), ராம் (24) ஆகியோரை கைது செய்தனர். இந்த போதைப்பொருள் விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டிருந்தால் மிதிலாஜின் எதிர்காலமே வீணாகி இருக்கும் என்று சக்கரக்கல் போலீசார் தெரிவித்தனர்.