டெல்லி: ஆதார் தகவல்களை ஒன்றிய அரசு கையாள்வதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டைக்கு என தனிப்பட்ட ஒருவரின் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றின் பதிவுகள் மேற்கொண்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பயோமெட்ரிக் பதிவுகள் இருப்பதால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என ஒன்றிய அரசு உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து ஆதார் எண்ணை ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அதில், ‘ஆதார் தகவல்கள் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வரை, அதன் தகவல்களை ஒன்றிய அரசு கையாள்வதற்கு தடையோ அல்லது இடைக்காலமாக நிறுத்தி வைக்கவோ வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘ஆதார் விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தேவைப்பட்டால் உயர் நீதிமன்றங்களை நாடி கோரிக்கை வைக்கலாம்’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.