Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனுக்கள் கொடுப்பது மட்டுமே; எடப்பாடி பழனிசாமியின் வேலை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அட்டாக்

பெரம்பூர்: மனு கொடுப்பது மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் வேலை. அதனால் எதுவும் நடக்காது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், எழும்பூர் தெற்கு பகுதி சூளை பேருந்து நிலையம் மற்றும் பெரியமேடு பகுதிகளில், ‘’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ நிகழ்வில் 158 வது நாளாக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே‌.சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது;

எஸ்.எம்.எஸ் மூலமாக சிறப்பு தரிசனத்தில் அர்ச்சகர்கள் பணம் வாங்கிக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டது வீடியோ மூலம் அப்பட்டமாக தெரிகிறது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பில்லை.

தமிழ்நாடு வளர்ச்சிதான் பிரதான வளர்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களை வரவேற்கிறோம். நிலுவையில் உள்ள கல்வி நிதியை உடனடியாக விடுவியுங்கள். பேரிடர் நிதி, மெட்ரோ நிதி உடனடியாக விடுவியுங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முதல்வர் தெரிவித்த அனைத்து கோரிக்கைளை நிறைவேற்றுங்கள் மகிழ்ச்சி‌ அடைவோம்.

கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சியில் ஒன்றிய அரசுக்கு அதிகளவில் ஜிஎஸ்டி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் திருப்பித் தரப்பட்ட தொகை மிகக்குறைவு. பிரதமருக்கு உண்டான மதிப்பு, மரியாதையும் கொண்ட அரசு இது. அந்த வகையில்தான் பிரதமர் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பெரும்பாலானோர் பங்கேற்று உள்ளனர். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். வந்தாரை வரவேற்கும் தமிழ்நாடு, பிரதமருக்கு உண்டான மரியாதையை அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு மனு கொடுப்பது மட்டுமே வேலை. அதனால் தீர்வு ஒன்றும் இருக்காது. தமிழ்நாடு முதலமைச்சர் கட்சி நலன் மற்றும் தன் நலம் சார்ந்து மனு அளித்ததில்லை. தமிழ்நாடு மக்களின் நலன் மற்றும் தேவையை சார்ந்து மனு அளிப்பார். இவ்வாறு கூறினார்.