Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமவெளியிலும் குறைந்த ஏக்கரில் நிறைவான மகசூல் தரும் மிளகு!

மிளகு சாகுபடியில் புதுப்புது யுத்திகளைப் புகுத்தி வெற்றி கண்ட புதுக்கோட்டை விவசாயி ராஜாகண்ணு “மிளகு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் தான். ஆனால் மிளகு சாகுபடி கேரளா, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் தான் செய்ய முடியும். சமவெளி பகுதி விவசாயிகளால் மிளகு சாத்தியாமா?" இப்படி எந்த விவசாயியாவது கேட்டால் சற்றும் தயங்காமல் "முடியும்" என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று மிளகை பறித்து கையிலும் கொடுக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் அனவயல் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜாகண்ணு அவர்கள்.

உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து பணி ஓய்வுக்குப் பின் தீவிர விவசாயியாக மாறியுள்ள திரு. ராஜாகண்ணு அவரது அனுபவங்களை ஈஷா விவசாயக்குழுவுடன் பகிர்ந்து கொண்டார். "எனக்கு 10 ஏக்கரில் தென்னந்தோப்பு இருக்கிறது. ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்கிறேன். என் நண்பர் வடகாடு பால்சாமி என்பவர் மூலமாக தான் மிளகு பயிர் எனக்கு அறிமுகம் ஆனது. சமவெளிப் பகுதிகளில் மிளகை வளர்க்கும் தொழில்நுட்பத்தை கூறி, மிளகுக் கன்றுகள் சிலவற்றையும் அவர் தான் எனக்கு கொடுத்தார். கடந்த 17 வருடமாக மிளகு சாகுபடி செய்கிறேன். ஆரம்பத்தில் ஒரு ஏக்கரில் தொடங்கி தற்போது 3 ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வருகிறேன்" என்றார்.

தன்னுடைய நிலத்தில் மரம் சார்ந்த விவசாயத்தின் நடுவே மிளகு வளர்ப்பதை குறித்து பேசிய அவர், "மிளகை தென்னையிலும், தென்னைக்கு இடையே நடப்பட்டுள்ள மற்ற மரங்களிலும் படர விட்டுள்ளேன். மரத்திற்கு மரம் எட்டு அடி இடைவெளி விட்டு போத்துக் கன்றுகளான கிளைரிசிடியா, வாதநாராயணன், கிளுவை போன்ற மரங்களை நட்டிருக்கிறேன். இந்த மரங்களில் மிளகு நன்றாகப் படர்கிறது. முள்முருங்கை திடீரென காய்ந்துவிடும், அகத்தி மரங்கள் காற்றுக்கு சாய்ந்து விடக் கூடியவை, அதனால் இந்த இரண்டு மரங்களையும் தவிர்ப்பது அவசியமாகும். அதுமட்டுமின்றி கிளைரிசிடியா மிகவும் உகந்தாக உள்ளது.

மேலும், எல்லா மாதங்களும் மிளகு பூத்து காய்க்கும் என்றாலும் மலைப் பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்கள் பூக்கக்கூடிய மிளகு; சமவெளிப் பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூத்து ஜூன், ஜூலையில் அறுவடைக்குத் தயாராகிறது. கரிமுண்டா ரக மிளகை ஒரு ஏக்கரில் பயிர் செய்தால் 3வது வருடத்தில் 60-80 கிலோ மிளகு கிடைக்கும், இது படிப்படியாக அதிகரித்து 7வது வருடத்தில் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அதாவது நன்கு வளர்ந்த ஒருகொடியில் 10 கிலோ வரை அறுவடை செய்யலாம் என்ற ஆச்சரிய தகவலையும் தெரிவித்தார்.

மிளகு சாகுபடியில் அவர் பயன்படுத்தும் புதுமையான முறைகள் மற்றும் எந்த ரகங்கள் நன்கு வளரும் என்பதை பற்றி பேசிய அவர், "மிளகு கொடிகள் படர மரங்களுக்கு இடையில் சிமெண்ட் போஸ்ட்களை நட்டு அதைச் சுற்றி கம்பி வலையை கட்டி விட்டு அதில் மிளகுக் கொடிகளை ஏற்றலாம். மலேசியா போன்ற நாடுகளில் இந்த போஸ்ட் முறையில் சமவெளிகளில் வெற்றிகரமாக மிளகு சாகுபடி செய்கிறார்கள். இந்த முறையில் நானும் சில போஸ்ட் கம்பங்களை நட்டு மிளகுக் கொடியை படர விட்டுள்ளேன்.

இதை தவிர்த்து, கரிமுண்டா ரக மிளகு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கொடுத்து வரும் இவரிடம் மிளகு விற்பனை குறித்து சொல்லுங்கள் என கேட்ட போது, "மிளகுக்கு நல்ல விலையோட விற்பனை வாய்ப்பு உள்ளது. தற்போதைய சந்தை விலை ஒரு கிலோ ரூ.1000, மொத்த விற்பனை என்றால் கிலோ ரூ.800க்கு கொடுக்கிறோம். மிளகு சமவெளியில் விளைவதால் அதன் தரம் குறைவதில்லை. சொல்லப்போனால் அதன் காரம் மேலும் நன்றாக உள்ளது. " என உற்சாகமாக தெரிவித்தார்.

இவரை போலவே மரப்பயிர் விவசாயிகள் மிளகை ஊடுபயிராக செய்து நல்ல வருமானம் பெற வேண்டும் என்பதற்காக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது. கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர்.

இக்கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.