10 தேர்தல்களில் பைபை சொன்ன மக்கள் வரும் தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட்பை சொல்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
மயிலாடுதுறை: பத்து தேர்தல்களில் பை..பை.. சொன்ன மக்கள், வரும் தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட்பை சொல்வார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.48.17 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.113.51 கோடியில் 12 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 54,520 பயனாளிகளுக்கு ரூ.271.24 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது:
நேற்று (நேற்றுமுன்தினம்) சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமை தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த திட்டத்தை அறிவித்தவுடன், இதை பார்த்து பயந்து போய் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இந்த திட்டத்தை பற்றி அவதூறுகளை பரப்ப தொடங்கி இருக்கிறார். அவரே போதும் இந்த திட்டத்தில் எத்தனை சேவை இருக்கிறது, என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் விமர்சனம் என்கின்ற பெயரில், நமக்கு விளம்பரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். அதற்காக நன்றி. ஆனால், இந்த திட்டத்தை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்.
“தேர்தலுக்கு முன்பே ஊர் ஊராக சென்று ஒரு பெட்ஷீட்டை போட்டு, உட்கார்ந்து மனு வாங்கினாரே ஸ்டாலின் அதெல்லாம் என்னானது?” என்று அதிமேதாவி மாதிரி பேசுகிறார். சொல்கிறேன் பெட்ஷீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்செல் ஷீட்களாக மாற்றி, ஒர்க் ஷீட்டாக மாற்றி தீர்வு கண்டிருக்கிறோம். அது தெரியாமல் நான்கு வருடமாக குடும்பத்தோடு ஸ்டாலின் இருந்தார் என்று சொல்கிறார். என் குடும்பத்தை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டு மக்கள் தான் என்றும் அவர்களோடு தான் இருப்பேன், இருப்பேன், இருக்கிறேன், இருந்தே தீருவேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களுடைய ஸ்டாலின் பொறுத்தவரைக்கும், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்திற்காக வீடு, வீடாக செல்கிறோம். அவரது கட்சியை சேர்ந்தவர்கள் குடும்பத்திலேயே விசாரித்து பார்க்கட்டும். கட்சி பேதம் பார்க்காமல், தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கும் ஆட்சி தான், இந்த ஸ்டாலின் ஆட்சி. மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும், அதிமுக குடும்பங்களை சேர்ந்த மகளிருக்கும் சென்றடைகிறது.
மறுக்க முடியுமா?
அதிமுக ஆட்சி செய்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டு நிர்வாகத்தை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி வைத்திருந்தார்கள். அதை சரி செய்து ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று அறிவித்தேன். நான் சொன்னேன், சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று நம்முடைய நெஞ்சில் வாழக்கூடிய கலைஞரின் மகன் நான், அதை உறுதியாக சொன்னோம் சொன்னபடி கொடுத்து வருகிறோம். திராவிட மாடல் அரசின் நான்காண்டு ஆட்சியில், இதுபோல பல திட்டங்களின் பயன்களை என்னால் சொல்ல முடியும். பழனிசாமி தன்னுடைய நான்காண்டு ஆட்சியில் என்ன செய்தார்? இதே மயிலாடுதுறையில், நாம் சிலை அமைத்திருக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான ஏழை பெண்கள் திருமண உதவித்திட்டத்தை 2018ம் ஆண்டோடு நிறுத்தியவர்தான் பழனிசாமி. மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை நிறுத்தியவரும் அவர் தான். அவர் எனக்கு டாட்டா - பை-பை சொல்கிறாராம்.
மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே... 2019ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா - பை-பை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்ல போகிறார்கள். இனி மக்கள் ஒருபோதும் உங்களை நம்ப போவதில்லை. அட… ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்ப தயாராக இல்லை. ஒரு திரைப்பட காமெடியில் வரும் “அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” அதுபோல அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
உங்களை கொச்சைப்படுத்துகிறார் என்னவென்றால், ஆயிரம் ரூபாய்க்காக ஏமாந்துவிட்டீர்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் தாய்மார்களை பார்த்து பேசுகிறார். மக்கள் ஏமாறவில்லை., பாஜவை நம்பி நீங்கள்தான் ஏமாந்து போயிருக்கிறீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டிலிருந்து காப்பாற்றுவதற்காக அதிமுகவையே டெல்லிக்கு சென்று அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள். மூன்று கார், நான்கு கார் என்று மாறி அமித்ஷா வீட்டுக்கதவை தட்டிய கதையை பற்றி தம்பி உதயநிதி தான் முதன் முதலில் பேசினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள், “அமித்ஷாவின் வீட்டு கதவை தட்டினால் என்ன தப்பு?” என்று வெட்கமில்லாமல் கேட்கிறீர்கள்? யாருக்காக தட்டினீர்கள்? உங்கள் குடும்பத்தை ரெய்டிலிருந்து காப்பாற்ற, உங்கள் கட்சியையே அடமானம் வைக்கத்தானே தட்டினீர்கள்?,
பாஜ கூட்டணியால்தான் 2021 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தோற்றுப்போனோம் என்று நீங்களும் சொன்னீர்கள். உங்கள் கட்சிக்காரர்களே வெளிப்படையாக சொன்ன பிறகும், அதே கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே, அதற்கு பெயர்தான் குடும்ப பாசமா, உங்கள் குடும்பத்தை காப்பாற்ற கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட கட்சியையே டெல்லியோடு சதுரங்க வேட்டையில் சிக்கி அடமானம் வைத்து விட்டீர்கள். உங்களை சொந்த கட்சிக்காரர்களே நம்பாத நிலையில், தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பி ஏமாறத்தயாராக இல்லை.
மக்களை பொறுத்தவரைக்கும், “ஸ்டாலின் கையில் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும், சுயநலத்திற்காக எந்த அந்நிய சக்தியையும் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்குள் விடமாட்டார், தடுத்து நிறுத்துவார்” என்று நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்கள். அந்த எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, உண்மையாக உழைத்து இந்த நான்காண்டு காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். வளர்ச்சியில் முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்று உங்கள் ஓனரான ஒன்றிய பாஜ அரசே சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டை நாங்கள் உயர்த்தி காட்டியிருக்கிறோம். உறுதியோடு சொல்கிறேன், அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் ஆட்சி தான். திராவிட மாடல் 2.0வும், இணையற்ற ஆட்சியாக இந்தியாவிலேயே தலைசிறந்த ஆட்சியாக தான் இருக்கும் என்று இப்போதே உறுதி அளிக்கிறேன்.
மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மூலமாக, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோளாக உங்களை காக்கக்கூடிய நம்முடைய அரசை நீங்கள் காக்க வேண்டும் எனக்கேட்டு, இந்த இனிய சிறப்பான மாநாடு போல் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மீண்டும் உங்களில் ஒருவனாக இருந்து நன்றி கூறி விடை பெறுகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முதல்வரை வாழ்த்திய வெளிநாட்டு பெண்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மயிலாடுதுறை மங்கயநல்லூர் புரவாச்சேரி என்ற இடத்தில் பொதுமக்களுடன் இணைந்து முதல்வருக்கு வெளிநாட்டு பெண்கள் ஆங்கிலத்தில் வாழ்த்தினர். இதனை கண்ட முதல்வர், அவர்களை அழைத்து சிறிது நேரம் உரையாடினார். அப்போது அவர்கள் தாங்கள் ரஷ்ய நாட்டிலிருந்து வந்ததாகவும், முதல்வர் குறித்து கேட்டறிந்ததாகவும் கூறினர். பின்னர் தமிழ் முறைப்படி கைகூப்பி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்ெகாண்ட முதல்வர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
‘சுந்தரா டிராவல்ஸ்’ பஸ்சில கிளம்பிட்டாரு எடப்பாடி...
‘ஒரு படத்தின் பெயர் உங்களுக்கு தெரியும் - ‘சுந்தரா டிராவல்ஸ்’ மாதிரி ஒரு பஸ் எடுத்து கொண்டு கிளம்பி விட்டார். அந்த பஸ்ஸிலிருந்து புகை வருவது மாதிரி இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும் அவதூறுமாக வந்து கொண்டே இருக்கிறது. மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை. விரக்தியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், தமிழ்நாட்டு மக்களான உங்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கிறார்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்பதே தீர்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘நம்முடைய மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகமாக வாழும் மீனவ மக்களின் நலன் காக்கவும், நம்முடைய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து கொண்டிருக்கிறது. வானகிரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்து கொண்டிருக்கிறேன். கடந்த ஏப்ரல் 2ம்தேதி சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். இதுவரையில், கச்சத்தீவை மீட்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?, குறைந்தபட்சம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்வதையாவது அவர்கள் தடுத்து இருக்கிறார்களா? இல்லை, படகுகளை மீட்க முயற்சி செய்திருக்கிறார்களா? அதுவும் கிடையாது. சமீபத்தில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் என்ன பேசியிருக்கிறார்? “கச்சத்தீவு என்பது கடல் பகுதியில், தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்” என்று பேசியிருக்கிறார்.
இதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்ன பதில் அளித்திருக்கிறார்? தயவுசெய்து நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். இதுவரை இல்லை. எங்களுடைய தொடர் கோரிக்கை, பிரதமர் இதில் நேரடியாக தலையிட்டு, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்கிறோம். அதற்கு தமிழ்நாடு அரசும், திமுகமும் தொடர்ந்து போராடும் என்பதை மீனவ சகோதரர்களுக்கு நான் உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார்.
வீடு வீடாக முதல்வர் பிரசாரம்
ஓரணியில் தமிழ்நாடு என்கிற தேர்தல் பிரசார இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒன்றாம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழுவூர் கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்ட கலைஞரின் 9 அடி உயரம் உள்ள வெண்கல திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமம் அம்பேத்கர் தெருவில் உள்ள மதியழகன், பெரியசாமி ஆகியோர் வீடுகளுக்கு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் மூலமாக பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.
மேலும் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் சரியான முறையில் கிடைக்கிறதா? என்பது குறித்து வீட்டில் இருந்த பெண்களிடம் கேட்டறிந்தார். மேலும் திமுகவில் சேர விருப்பம் உள்ளதா? எனவும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டறிந்தார். அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? அரசின் திட்டங்கள் முழுமையாக வந்தடைகிறதா? எனது தலைமையில் ஆட்சி எப்படி செயல்படுகிறது? என்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.