Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

படாளம் அருகே கார்மீது லாரி மோதி சென்னையை சேர்ந்த 2 பேர் பலி: 5 பேர் படுகாயம்

மதுராந்தகம்: மேல்மலையனூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இன்று அதிகாலை ஜிஎஸ்டி சாலை வழியே ஒரு காரில் சென்னையை சேர்ந்த 7 பேர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் கேரட் ஏற்றி வந்த சரக்கு லாரி வேகமாக மோதியது. இதில், காருக்குள் இருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டிவனம் அருகே மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு நேற்று வைகாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த 7 பேர் காரில் சென்றிருந்தனர்.

தரிசனத்தை முடித்துவிட்டு, இன்று அதிகாலை திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலையில் 7 பேரும் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். படாளம் அருகே வந்துகொண்டிருந்த போது, பின்னால் கேரட் மூட்டைகளை ஏற்றிவந்த சரக்கு லாரி, காரின்மீது வேகமாக மோதியது. இவ்விபத்தில், கார் மற்றும் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில், காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த மூதாட்டி பார்வதி (70), அவரது பேரன் சச்சின் (7) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகிவிட்டனர்.

மேலும், காரில் இருந்த உறவினர்களான ரமணி (52), சாந்தி (50), வினோத் (33), புவனா (30) மற்றும் 3 வயது பெண் குழந்தை ஆகிய 5 பேரும் படுகாயங்களுடன் அலறி கூச்சலிட்டனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும் படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு விபத்தில் இறந்த மூதாட்டி மற்றும் அவரது பேரன் ஆகிய இருவரின் சடலங்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து நடத்திய விசாரணையில், ஜிஎஸ்டி சாலை பகுதியில் தொடர் மழை காரணமாக, லாரியில் பிரேக் பிடிக்கவில்லை எனத் தெரியவந்தது.