கனடா : பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம் என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க் கார்னி, மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பாலஸ்தீனம் என்றும் வரும் செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் இந்த முடிவுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா அரசின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹமாஸுக்கு ஒரு வெகுமதி என்று தெரிவித்துள்ளது. காஸாவின் போர் நிறுத்ததிற்கும் பிணை கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் இந்த முடிவு தீங்கை விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.