காரைக்குடி : காரைக்குடியில் இருந்து நகரத்தார் மற்றும் நாட்டார்கள் 425வது ஆண்டாக காவடி எடுத்துக் கொண்டு பழநி நோக்கி புறப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து நகரத்தார்கள் காவடி எடுத்துக் கொண்டு, தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, கானாடுகாத்தான், கண்டனூர் உள்பட 96 ஊர்களை சேர்ந்த 302க்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து காவடி எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் குன்றக்குடி வந்தடைந்தனர்.
நேற்று காலை பூஜை முடித்து குழுவினர் பழநியை நோக்கி புறப்பட்டனர். இவர்கள் குன்றக்குடி மயிலாடும்பாறையில் காவடி ஆட்டம் ஆடிவிட்டு தங்களின் பாதயாத்திரையை துவங்கினர். இக்குழுவினர் தைப்பூசத்தின் முதல்நாள் பழநியை சென்றடைவார்கள். அங்கு பழநி முருகனை தரிசித்து விட்டு, மீண்டும் நடைபயணமாகவே குன்றக்குடியில் மீண்டும் ஒன்று கூடுவார்கள். அதன்பின்னர் மகேஸ்வர பூஜை நடத்தி விட்டு அவரவர் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
425 ஆண்டுகள் பழமை மாறாத இந்த காவடி பாதயாத்திரையை காண வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர். அதேபோல் நாட்டார்கள் காவடி எடுத்துக்கொண்டு பழநி நோக்கி சென்றனர். குன்றக்குடியில் இருந்து செல்லும் வழி முழுவதும் பாதயாத்திரை செல்வோருக்கு பால், பழம், உணவு, குடிநீர் என பல்வேறு பொருட்களை பக்தர்கள் வழங்கினர்.