Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாளையில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை எஸ்ஐ தம்பதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது: மகன் சிறையில் அடைப்பு

நெல்லை: காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை எஸ்ஐ தம்பதி, அவர்களது மகன் என 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தம்பதியின் மகன் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், பிரையண்ட் நகரில் வசித்து வருபவர் சந்திரசேகர் (53). விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (49). ஓட்டப்பிடாரம் பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன்கள் கவின் செல்வகணேஷ் (27) பொறியியல் படித்து விட்டு, சென்னை, துரைப்பாக்கத்தில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இரண்டாவது மகன், பிரவின் செல்கர் (25), சென்னை, பெருங்குளத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம். கவின் செல்வ கணேஷ் பள்ளிப்படிப்பை தூத்துக்குடியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் முடித்தார். அப்போது அவரது வகுப்பு தோழியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

அவரது தோழி பிளஸ் 2 முடித்தபின் சித்த மருத்துவம் படித்து டாக்டராகி, நெல்லை கேடிசி நகரில் உள்ள சித்த மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது அப்பா சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் எஸ்ஐகளாக உள்ளனர். கவின் செல்வகணேஷ் தோழி டாக்டர் என்பதால் உறவினர்களுக்குத் தேவையான மருத்துவ தேவைகள், ஆலோசனைகளை பெற அவருடன் செல்போனில் பேசியுள்ளார். இவர்களது நட்பை தோழியின் தம்பி சுர்ஜித் (21). சந்தேகித்ததாகவும், இதுதொடர்பாக கவின் செல்வகணேஷை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கவின் செல்வகணேஷ் தனது தாத்தா முத்துமாலையை சிகிச்சைக்காக ேதாழி வேலை பார்க்கும் சித்த மருத்துவமனைக்கு தாய் தமிழ்ச்செல்வி, தம்பி பிரவின் செல்கர் ஆகியோருடன் நேற்று முன்தினம் அழைத்து சென்றார். அப்போது சுர்ஜித் அங்கு வந்து பைக்கில் கவின் செல்வகணேசை தனியாக பேச அழைத்துச் சென்றார். நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என தமிழ்ச்செல்வி, இளைய மகனுடன் அவரை தேடிச் சென்றார். அப்போது, அஷ்டலட்சுமி நகர் 12வது தெருவில் சுர்ஜித்தும், கவின் செல்வ கணேசும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

திடீரென ஆத்திரமடைந்த சுர்ஜித், ஜாதி பெயரை சொல்லி திட்டி தாயின் கண் முன்னே கவின் செல்வகணேஷை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினார். மகன் துடிதுடித்து இறந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி பாளை., போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சுர்ஜித் மீதும், அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். சுர்ஜித் நேற்று முன்தினம் போலீசில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘கவினும், எனது அக்காவும் பழகியது எனது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவினை எனது அக்காவுடன் பேசுவதை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து பேசி வந்தார்.

இதனால் ஆத்திரத்தில் அவரை தனியாக அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டினேன்’ எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சுர்ஜித்தை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள போலீஸ் தம்பதியை பாளை போலீசார் தேடி வருகின்றனர். உறவினர்கள் போராட்டம்: கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததும் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று மதியம் முக்காணி ரவுன்டானா பகுதிக்கு சென்று 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 24 மணி நேரத்தில் குற்றவாளியின் பெற்றோரை கைது செய்வோம் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.

* சர்ச்சைக்குரிய இன்ஸ்பெக்டர் உளவுத்துறை போலீசார் மீது குற்றச்சாட்டு

கொலை நடந்த இடம் பாளையங்கோட்டை போலீஸ்நிலைய எல்லைக்குள் வருகிறது. இந்த பகுதியில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் காசிப்பாண்டியன். இவர், ஏற்கனவே ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஒரு கோஷ்டிக்கிடையே உள்ள மோதல் குறித்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். இரு தரப்பினரையும் ஒன்றாக அழைத்து, இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளீர்கள். என் எல்லைக்குள் கொலை நடந்தால் அவ்வளவுதான் என்று மிரட்டியுள்ளார். இரு தரப்புக்கும் மோதல் இருப்பது தெரியும்.

ஆனால் கொலை செய்யும் அளவுக்கு மோதல் உள்ளதா என்று இருவருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் அழைத்து, மிரட்டிய ஓரிரு நாளிலேயே ஒருவரை மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர் கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து காசிப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் நெல்லையைச் சேர்ந்த முன்னாள் ஏடிஜிபி ஒருவரின் சிபாரிசின் பேரில் மீண்டும் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டராக வந்தார். இவர், தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர்களின் உறவினர் என்று கூறப்படுகிறது.

இதனால்தான் முதல் நாளே பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும், உளவுத்துறையிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் தென் மாவட்டங்களில் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் திட்டமிட்டு செயல்படுவதால், தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் தாக்குதல் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் தென் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* போலீஸ் தம்பதிக்கு தொடர்பு

கவின் செல்வகணேஷின் தாயார் தமிழ்ச்செல்வி போலீசில் அளித்த புகாரில், ‘போலீஸ் தம்பதியின் மகன் சுர்ஜித், தன்னுடைய அப்பா, அம்மா அழைத்ததாக எனது மகனை அழைத்துச் சென்றார். எனவே அவர்களது தூண்டுதலின் பேரில் எனது மகனை மிரட்டி உள்ளனர். அவர்களது தூண்டுதலின் பேரில்தான் எனது மகன் கொல்லப்பட்டு உள்ளார். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

* பெண் டாக்டரிடம் ரகசிய விசாரணை

கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கு தொடர்பாக, சுர்ஜித் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டரிடம் மகளிர் போலீசார் நேற்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தான் கவின் செல்வ கணேஷை காதலிக்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.