Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தான் சாக்லேட், வாக்காளர் அட்டை வைத்திருந்தனர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளை கொன்றுவிட்டோம்: மக்களவையில் அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் 3 பேர் காஷ்மீரில் ராணுவம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக ஒன்றிய உள்துறை அமித்ஷா மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நேற்று தொடர்ந்தது. இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஸ்ரீநகரில் ராணுவம், சிஆர்பிஎப், காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய ஆபரேஷன் மகாதேவ் கூட்டு நடவடிக்கையில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் பெயர் சுலைமான் என்கிற பைசல், ஆப்கானி, ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், சுலைமான், ஆப்கானி இருவரும் லஷ்கர் இ தொய்பாவில் ஏ பிரிவை சேர்ந்த முக்கிய தளபதி. ஜிப்ரான் தேடப்படும் பயங்கரவாதி. பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கில் இந்திய குடிமக்களைக் கொன்றதில் தொடர்புடைய இந்த 3 தீவிரவாதிகளும் இப்போது கொல்லப்பட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக இவர்களுக்கு தங்குமிடம் அளித்ததற்காகவும், உணவு வழங்கியதற்காகவும் கைது செய்யப்பட்டவர்களால் இந்த தீவிரவாதிகளின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள், பஹல்காமில் கண்டெடுக்கப்பட்ட காலி தோட்டாக்களுடன் ஒத்துப் போவது தடயவியல் சோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் இருவரின் பாகிஸ்தானிய வாக்காளர் அடையாள அட்டைகளையும், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளையும், ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்கள் கொல்லப்படுவதை பிரதமர் மோடி ஏற்கனவே உறுதி செய்தார். ஆபரேஷன் மகாதேவ் மூலம் பஹல்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர். இந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி மக்களவையில் ஆளும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து மகிழ்ச்சி அலையை தூண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், எதிர்க்கட்சியின் முகங்கள் இருண்டு போயுள்ளன. இது என்ன மாதிரியான அரசியல்? கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் மதத்தை பார்த்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.

பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. அப்பாவி மக்களின் மதம் குறித்து கேட்ட பிறகு, அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து பயங்கரவாதத்தின் மூல காரணம் பாகிஸ்தான். காங்கிரஸ் செய்த தவறால் தான் பாகிஸ்தான் உருவானது. பிரிவினையை அவர்கள் நிராகரித்திருந்தால் இன்று பாகிஸ்தான் இருந்திருக்காது. பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்தியாவிலேயே உருவானவர்களாக இருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? யாரைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்? தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படி என்றால் நாம் ஏன் பாகிஸ்தானைத் தாக்கினோம் என்று சிதம்பரம் கூற விரும்புகிறார். இது பாகிஸ்தானைப் பாதுகாப்பதற்கான தெளிவான சதி. ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கின. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கெஞ்சியதால்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்திய படைகள் பாகிஸ்தானின் போர் விமானங்களை இயக்க முடியாத வகையில், விமான தளங்களை அழித்ததே, அவர்கள் தாமாக போர் நிறுத்தத்துக்கு முன்வர காரணாமாக அமைந்தது. தற்போது நடப்பது மோடி ஆட்சி, மன்மோகன் சிங் ஆட்சி அல்ல. தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலை அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடி கொடுத்துள்ளோம். உரி, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம். தற்போது பல கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளை அழித்துள்ளோம்.

நீங்கள் பாகிஸ்தானுக்கு நற்சான்று அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? எவ்வித அதிகாரமும் இல்லை. சீனாவுடனான போரின் போது 30,000 க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் நேரு ஆட்சியில் சீனாவுக்கு வழங்கப்பட்டது. நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என மூன்று தலைமுறைகளாக அவர்களுக்கு சீனாவின் மீது அனுதாபம் உள்ளது. தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்காக நாடாளுமன்றத்தில் அழுதவர்தான் சோனியா காந்தி. உரக்கப் பேசுவதால் உண்மையை மறைத்துவிட முடியாது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உட்பட பல தீவிரவாதிகள் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றது காங்கிரஸ் ஆட்சிகளில் தான்.

காஷ்மீர் பிரிவினைவாத கூட்டணியான ஹுரிய மாநாட்டின் தலைவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில் அரசு பிரதிநிதிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போது மோடி ஆட்சியில் அவர்கள் அனைவரும் சிறையில் உள்ளனர். நாங்கள் ஹுரியத்துடன் பேச விரும்பவில்லை. காஷ்மீர் இளைஞர்களுடன் பேச விரும்புகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பலர் அழிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளால் நடந்த அசம்பாவித சம்பவங்கள் உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகள் யாரும் இல்லாததால், பாகிஸ்தானில் இருந்து இப்போது பயங்கரவாதிகள் அனுப்பப்படுகின்றனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது காஷ்மீரில் பயங்கரவாத சூழலை முற்றிலும் அழித்துவிட்டது. இவ்வாறு அமித்ஷா ஆவேசமாக பேசினார்.

* நேரு தான் காரணம்

அமித் ஷா பேசுகையில், இந்த சமயத்தில் முந்தைய போர் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம். 1948ம் ஆண்டில், இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் கைப்பற்ற ஒரு தீர்க்கமான நிலையில் இருந்தன. ஆனால் நேரு ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தார். அவரின் ஆட்சியில்தான் சிந்து நதியின் பகிர்வு 80 சதவிகிதம் பாகிஸ்தானுக்கு வழங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1971 போரில் நாடே இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தது. பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்த அந்த நிகழ்வு வரலாற்றில் எப்போதும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றாமல் சிம்லா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பெற்றிருந்தால், இன்று பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவசியமே இருந்திருக்காது.