பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கு என்ன ஆதாரம்?: ப.சிதம்பரத்தின் கேள்வியால் புதிய சர்ச்சை
புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கு என்ன ஆதாரம்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்புகள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்த முக்கிய விவரங்களை ஆளும் பாஜக அரசு வெளியிடத் தயங்குகிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கே? அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? அவர்களை அடையாளம் கூட காணவில்லையே ஏன்? அவர்கள் இந்தியாவிலேயே உருவான தீவிரவாதிகளாகக் கூட இருக்கலாம். பாகிஸ்தானில் இருந்துதான் வந்தார்கள் என்று ஏன் நீங்களாகவே கூறிகொள்கிறீர்கள்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தத் தாக்குதலில் நமக்கு ஏற்பட்ட இழப்புகளையும் ஒன்றிய அரசு மறைக்கிறது’ என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ப.சிதம்பரத்தின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தை இந்திய ராணுவ படைகள் எதிர்கொள்ளும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவின் எதிர்க்கட்சியாகப் பேசுவதை விடுத்து, பாகிஸ்தானின் வழக்கறிஞர்களைப் போலப் பேசுகிறார்கள். தேசப் பாதுகாப்பில் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது. ஆனால் காங்கிரசிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் எதிரியைப் பாதுகாக்கவே தலைகீழாக நிற்கிறார்கள்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கிடையே, மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ப.சிதம்பரத்தின் கருத்தை ஆதரித்து, ‘26 பேரை கொன்ற தீவிரவாதிகள் எங்கே என்று தெரிந்துகொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. ஒன்றிய அரசு தோல்வியடைந்துவிட்டதா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.