Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஹல்காம் தாக்குதல்; தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு: தீவிரவாதிகள் குறித்து தீவிர விசாரணை

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குததலைத் தொடர்ந்து உள்ளூர் போலீசாருக்கு உதவ உடனடியாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. என்ஐஏவின் ஐஜி தலைமையிலான அதிகாரிகள் குழு அடுத்த நாளே சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடத்தி, ஆதாரங்களை சேகரித்தனர். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ நேற்று முறைப்படி வழக்கு பதிவு செய்துள்ளது.

இது குறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், ‘‘தாக்குதல் நடந்த இடத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தடயவியல் மற்றும் பிற நிபுணர்கள் தொடர்ந்து ஆதாரங்களை தேடி வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த அனைத்து சாட்சிகளிடமும் என்ஐஏ குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தி தகவல்களை சேகரிக்கின்றனர்’’ என கூறப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், தாக்குதலை நேரில் கண்டவர்களிடம் தகவல்களை சேகரிக்க பல்வேறு மாநிலங்களுக்கு என்ஐஏ குழுவினர் விரைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதலில் 5 முதல் 7 தீவிரவாதிகள் வரை ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் தீவிரவாதிகள் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டு அவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி காஷ்மீரிகளை தண்டிக்க வேண்டாம்

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்முவில் உள்ள பந்திபோரா, புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் நேற்று மேலும் 3 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இதுவரை இடிக்கப்பட்ட தீவிரவாதிகளின் வீடுகள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் நேற்று எக்ஸ் பதிவில், ‘‘பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலை காஷ்மீரிகள் கூட்டாகக் கண்டிக்கிறார்கள். அதன் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்துவது அவசியம் என்றாலும், கண்மூடித்தனமான கைதுகள், வீடுகள் இடிக்கப்படும் சம்பவங்கள் வேதனை அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி தேடுவதில் அப்பாவி காஷ்மீரி குடும்பங்களைத் தண்டிக்க வேண்டாம் என்று அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.

  • காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 45 வயதான சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மக்ரே அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
  •  எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் தொடர்ந்து 3ம் நாள் இரவாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
  • முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் டெல்லியில் நேற்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.