பஹல்காம் தாக்குதல் முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வியே : மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா ஆவேச பேச்சு
டெல்லி :மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் ஆ.ராசா, "திமுக என்பதே தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு இந்தி தெரியாது, புரியாது; ஆனால் நான் இந்தியன். ஆனால், எங்களை தேச விரோதிகள் போல சித்தரிக்க முயற்சிக்கின்றனர். பாஜக அமைச்சர்களின் பேச்சில் பெருமை இருந்தது; ஆனால் கருத்து இல்லை. எந்த விவகாரம் ஆனாலும் நேரு, இந்திரா, காங்கிரஸ் என பேசுவதே பாஜகவினரின் வாடிக்கையாகிவிட்டது. அண்டை நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது நேரு எதையும் மறைக்கவில்லை. பஹல்காம் தாக்குதலுக்காக பிரதமர் முதல் பாஜக எம்.பி. வரை ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.
பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலேயே வெற்றி என கூறக்கூடாது. உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. தாய் பசியால் வாடினாலும் தவறு செய்ய மாட்டோம் என்ற கொள்கை கொண்டவர்கள் நாங்கள். உளவுப் பிரிவும், ரா அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளை கொடுத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை. 1999 டிச.24ல் இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவுக்கு ஆதரவு தந்தோம். தீவிரவாதி மவுலானா ஆசாத்தை விடுவிக்க முடிவு செய்த பிரதமர் வாஜ்பாயின் முடிவை ஆதரித்தோம். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக இருந்தது.
தேர்வில் பென்சில், பேனா பயன்படுத்துகிறோமா என்பது பிரச்சனை அல்ல; முறைகேடு நடக்கக் கூடாது. 3 நாடுகள் தவிர ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரித்ததாக அமித் ஷா கூறினார். ஆனால் ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டித்தோ, இந்தியாவை ஆதரித்தோ தீர்மானம் நிறைவேற்றவில்லை. பிரிக்ஸ், ஜி20, ஜி7 என எந்த அமைப்பும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. பஹல்காம் தாக்குதல் முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வியே. ஐ.எம்.எஃப் நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி ஒதுக்கியது இந்தியாவுக்கு பின்னடைவு."இவ்வாறு தெரிவித்தார்.