டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் இரு அவைகளும் திங்கள் கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடந்த திங்கட்கிழமை முதல் நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. அவை கூடியதும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரையும், மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீண்டும் மக்களவை மதியம் 2 மணிக்கு கூடியதும் மீண்டும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகஸ்ட் 4ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.