ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் 2வது சீசனுக்காக மலர் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான மலர் செடிகள், மூலிகைச் செடிகள், அலங்கார செடிகள், மரக்கன்றுகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் நடவு செய்யப்படுகின்றன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், விவசாயிகளுக்காகவும் இதன் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் துவங்க உள்ள 2வது சீசனுக்காக தாவரவியல் பூங்கா மற்றும் தேயிலை பூங்காவில் உள்ள நர்சரிகளில் ஸ்பைடர், ஐரீஷ், ஐடிராலிக்கா உள்பட பல்வேறு மலர் அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவைகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மலர் அலங்கார செடிகள் தயாரானவுடன் பூங்காவில் நடவு செய்வது மட்டுமின்றி விற்பனை செய்யப்பட உள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.