Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

செங்கோட்டை: பல மாதங்களாக தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளால் மட்டுமே நிரம்பியிருந்த தென்மலை எக்கோ டூரிசம், பாலருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தற்போது கேரளா சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன. கேரளாவில் ஓணம் பண்டிகை கடந்த 6ம்தேதி தொடங்கி 17ம்தேதி வரை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கேரளா சுற்றுலா பயணிகள் நேற்றுமுன்தினம் தென்மலை எக்கோ டூரிசம், பாலருவி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் குவிந்தனர். சுமார் 2500 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மலப்புரம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தென்மலையில் சுற்றுலாத்துறைக்கு மட்டும் ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அருகில் உள்ள செந்துருணி சுற்றுச்சூழல் சுற்றுலாத்துறைக்கு ரூ.1.30 லட்சம் கிடைத்துள்ளது. இரு இடங்களிலும் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் காலை முதலே நீண்ட வரிசை காணப்பட்டது. அனைத்து மண்டலங்களையும் பார்வையிட சுற்றுச்சூழல் சுற்றுலாவின் பகல்நேர பேக்கேஜ் ஆன ரூ.629 டிக்கெட் அதிகம் விற்பனையானது. குட்டவஞ்சி படகு சவாரி, கலம்குன்னு சபாரி, இடிமுருகன்பாறை, ரோஸ்மாலா, செந்தூரணியில் கூட்டம் அலைமோதியது. இதனால் படகு சவாரி உள்ளிட்ட இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரியங்காவு பாலருவி அருவியிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இங்கு ஒரே நாளில் ரூ.1.87 லட்சம் வருமானம் கிடைத்தது. இதுபோல் தென்மலை, ஆரியங்காவு பகுதி உணவகங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. ஆனால் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவியில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கும்பாவுருட்டி மற்றும் மணலார் நீர்வீழ்ச்சிகள் தமிழ்நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையே நம்பியுள்ளன என்பது குறிப்பிடக்தக்கது.