Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்.ஜி.ஆர்.நகரில் மூதாட்டி அடித்து படுகொலை; 9 நாட்களுக்கு பிறகு அடையாறு ஆற்றில் உடல் மீட்பு: கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: எம்.ஜி.ஆர்.நகரில் தனியாக வசித்த மூதாட்டி ஒருவரை 2 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்திக்காக கொடூரமாக உருட்டுக்கட்டையால் அடித்து கொன்று, உடலை சாக்கு பையில் மூட்டை கட்டி அடையாறு ஆற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது ெசய்தனர். கொலையான 9 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இன்று காலை மூதாட்டியின் உடல் மீட்டனர்.சென்னை எம்.ஜி.ஆர். நகர் மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் விஜயா(78). கட்டிடத் தொழிலாளியான இவர், பகுதி நேரமாக ஓட்டலிலும் வேலை செய்து வந்தார். இவருக்கு லோகநாயகி(42) என்ற மகள் உள்ளார். அவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 18ம் தேதி வேலைக்கு சென்ற விஜயாவை பார்க்க லோகநாயகியின் குழந்தைகள் வந்துள்ளனர். வெகு நேரம் வீட்டில் இருந்தும் தனது பாட்டி வீட்டிற்கு திரும்ப வில்லை. இதனால் தனது தாய் லோகநாயகிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி லோகநாயகி, தனது தாய் வேலை செய்யும் ஓட்டல் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். ஆனால் விஜயா வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். ஒரு நாள் தேடலுக்கு பிறகு கடந்த 19ம் தேதி லோகநாயகி எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், எனது தாய் விஜயா கடந்த 18ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாயமான அன்று வெள்ளை பூ போட்ட நிற புடவையை மற்றும் சிவப்பு நிற ஜாக்கிட் போட்டு இருந்தார். கழுத்தில் பால்நிற மணி மற்றும் ஒரு சவரன் கம்பல் அணிந்து இருந்தார். அவரது சுறுக்கு பையில் பணம் மற்றும் ஒரு சவரன் நகை வைத்திருந்தார். எனவே மாயமான எனது தாயை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி எம்ஜிஆர்.நகர் போலீசார் மயிலை சிவமூர்த்தி தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி வீட்டிற்கு அருகில் வசித்து வரும் பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் சென்று வந்தது தெரியவந்தது. பிறகு 19ம் தேதி அதிகாலை மீண்டும் பார்த்திபன்(32) தனது மனைவி சங்கீதா(28) ஆகியோர் விஜயா வீட்டிற்கு சென்று மூட்டை ஒன்றை தங்களது பைக்கில் வைத்து கொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால் போலீசார் பார்த்திபனை விசாரணைக்கு அழைக்க அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசாருக்கு பார்த்திபன் மற்றும் சங்கீதா தம்பதி மீது சந்தேகம் வலுத்தது. உடனே போலீசார் பார்த்திபன் செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரணை நடத்திய போது, அவர் விருதுநகரில் இருப்பது தெரியவந்தது. உடனே எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி விருதுநகர் போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை பிடித்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அதேநேரம் சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் விருதுநகருக்கு ெசன்று பிடித்து வைத்திருந்த பார்த்திபன் மற்றும் சங்கீதா தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:கட்டிட வேலை செய்து வந்த விஜயாவிடம் அடிக்கடி செலவுக்கு பார்த்திபன் பணம் வாங்கி வந்துள்ளார். விஜயா எப்போதும் தனது சுறுக்கு பையில் ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமல் ரொக்கமாக பணம் வைத்திருப்பார். வீட்டிற்கு வரும் அவரது பேர குழந்தைகளுக்கு செலவுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பாராம். மூதாட்டி விஜயாவுக்கு, மகள் லோகநாயகி இருந்தாலும், இவர் தனியாக வசித்து வந்தார். கையில் பணத்துடன் மூதாட்டி இருந்ததால் பல நாட்களாக பார்த்திபன் மற்றும் சங்கீதா ஆகியோர் எப்படியாவது பணத்தை நாம் பறிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். பார்த்திபனுக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்பம் நடத்த கையில் பணம் இல்லாமல் தனது மனைவியுடன் வறுமையில் வாடியுள்ளார்.

ஒரு கட்டத்தில் மூதாட்டியை மிரட்டி பணத்தை பறித்து விடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி கடந்த 18ம் தேதி விஜயா வேலைக்கு செல்ல புறப்பட்ட போது, சங்கீதா மற்றும் அவரது கணவர் பார்த்திபன் ஆகியோர், விஜயா வீட்டிற்கு சென்று செலவுக்கு பணம் கேட்டுள்ளனர். ஆனால் விஜயா தன்னிடம் பணம் இல்லை. கொடுத்த பணத்தை கொடுங்கள் என்று கூறியபடி வேலைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது பார்த்திபன் உனது சுறுக்கு பையில் வைத்திருக்கும் பணத்தை கொடுத்துவிட்டுபோ என்று மிரட்டும் வகையில் கேட்டுள்ளார். இதனால் மூதாட்டி விஜயாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் பார்த்திபன், விஜயாவின் சுறுக்குபையை பிடுங்கி அதில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை பறித்துள்ளார். இதனால் சத்தம் போட்ட விஜயாவை, பார்த்திபன் மனைவி சங்கீதா விஜயாவின் வாயை தனது இரண்டு கைகளால் போத்தியுள்ளார். அப்போது வீட்டில் இருந்து கட்டையால் பார்த்திபன் ஓங்கி விஜயாவின் தலையில் அடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே விஜயா மயங்கி துடிதுடித்து உயிரிழந்தார். உடனே பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் விஜயா காதில் அணிந்து இருந்த ஒரு சவரன் கம்பல், சுறுக்கு பையில் வைத்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டனர். பிறகு வெளியே தெரியாமல் இருக்க மூதாட்டி வீட்டில் இருந்த சாக்கு பையில் விஜயாவை மடக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாமல் வெளியே வந்துள்ளனர்.

பிறகு 19ம் தேதி அதிகாலை பார்த்திபன் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மீண்டும் மூதாட்டி வீட்டிற்கு சென்று மூட்டையில் கட்டி ைவத்திருந்த விஜயாவின் உடலை தனது பைக்கில் முன் பக்கம் வைத்து கொண்டு விருதுநகருக்கு புறப்பட்டுள்ளனர். ஊருக்கு செல்லும் வழியில் சைதாப்பேட்டையில் உள்ள அடையாறு ஆற்றில் மூட்டை கட்டி வைத்திருந்த விஜயாவின் உடலை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதப்படி விருதுநகருக்கு பைக்கிலேயே சென்று விட்டனர்.

வறுமை காரணமாக பணம் கடன் கேட்க சென்ற இடத்தில், விஜயாவுடன் ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்றதாகவும், அதன் பிறகு விஜயா அணிந்து இருந்த 2 சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை பறித்ததாக தம்பதி விசாரணையின் போது வாக்குமூலம் அளித்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, தம்பதியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். பிறகு தம்பதியின் வாக்குமூலத்தின் படி, போலீசார் விஜயா உடல் வீசப்பட்ட அடையாறு ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 நாட்கள் தேடலுக்கு பிறகு இன்று காலை உடல் மீட்கப்பட்டனர். அடையாறு ஆற்றில் உடல் வீசப்பட்டு 9 நாட்கள் ஆனதால் மூட்டையில் அழுகிய நிலையில் உடல் இருந்ததாகவும், இருந்தாலும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.2 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்திற்காக தம்பதி மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து உடலை மூட்டை கட்டி அடையாறு ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.