Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: பழைய பேருந்துகளை பழுதுபார்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும், மக்களின் நன்மைக்காக செயல்படும் துறையாக, தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. மற்ற மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து 70 சதவீதம் தனியார் வசமும், 30 சதவீதம் அரசு வசமும் இருக்கும். ஆனால், தமிழ் நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளும் வகையில், சுமார் 80 சதவீதம் போக்குவரத்து வசதிகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது.

அதிமுக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய பேருந்துகள் வாங்குவதும்; தமிழக மக்கள் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ள, பேருந்துகளின் ஆயுட் காலத்தை குறைந்த அளவு வருடங்களாக நிர்ணயித்தும்; குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய பேருந்துகளை ஏலம்விட்டு, அதற்கு பதில் புதிய பேருந்துகளை வாங்கி, தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள் மற்றும் இதர ஊழியர்களை நியமித்தும், பொது போக்குவரத்தை மக்களின் வசதிக்காக இயக்கியது. போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை அரசே ஈடு செய்தது.

30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களின் சேவைத் துறையாக, லாப நஷ்ட கணக்கு பாராமல் போக்குவரத்துத் துறை செயல்பட்டது. தேவைப்படும்போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர். ஆனால் தற்போது டயர் மற்றும் உதிரி பாகங்களை முறையாக கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஒட்டை-உடைசல் பஸ்கள் இயக்கப்பட்டு, இந்த அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது. பஸ்களின் படிக்கட்டுகள் உடைந்து ரோட்டில் விழுகிறது. பேருந்துகளின் வீல்கள் தனியாக கழன்று ஓடுகின்றன.

நடத்துனர் தன் இருக்கையோடு ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் விழுகிறார். பல பஸ்களில் இருக்கைகள் இருக்க வேண்டிய இடங்களில் பழைய டயர்களை போட்டு வைக்கிறார்கள். தற்போது, ஆங்காங்கே மழை பெய்யும் நிலையில், பேருந்துக்குள்ளேயும் மக்கள் குடைபிடிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களிலும், நகரப் பகுதிகளிலும் பிரேக்டவுன் ஆகி நிற்கும் பஸ்களை பயணிகள் தள்ளிச் செல்லும் காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும்.

புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அவர்களின் உயிரோடு விளையாடாமல், அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் அச்சமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தினார்.