புதிய ஓபிசி பட்டியலை நிறுத்தி வைத்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: மேற்கு வங்க அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓ.பி.சி) 140 புதிய துணை வகைப்பாடு தொடர்பாக பட்டியல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஓபிசி புதிய வகைப்பாடு தொடர்பான அறிவிப்புக்கு கடந்த ஜூன் 17ம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க அரசு தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ”புதிய ஓபிசி இட ஒதுக்கீடு பட்டியல் விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால் பல நியாயமான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை நிறுத்தி வைத்து தடை விதிக்க வேண்டும்’ என்றார். இதற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”இந்த விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். குறிப்பாக ஓபிசி பட்டியலை அங்கீகரிக்க சட்டமன்றத்திற்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. குறிப்பாக இடஒதுக்கீடு என்பது நிர்வாக செயல்பாடாகும். அதில் தலையிட்டு இடைக்கால தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது எங்களுக்கு புரியவில்லை.
மேலும் இடஒதுக்கீடு வழங்க அரசின் நிர்வாக அறிவுறுத்தல்கள் மட்டுமே போதுமானவையாகும். அதற்கு சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக 2012 சட்டத்தின் அட்டவணையில் திருத்தங்கள் மற்றும் வகுப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக மாநில அரசுகள் அறிக்கைகள் மற்றும் மசோதாக்களை சட்டமன்றத்தில் சமர்பித்து இருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தில் இருந்து நாங்கள் வேறுபடுகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.