Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

* திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை

* புவியின் மேற்பரப்பு மாற்றங்களை துல்லியமாக ஆராயும்

சென்னை: புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. அதன்படி கடந்த 2014 செப்டம்பர் 30ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் 2,392 கிலோ எடையில் நிசார் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன.

இதையடுத்து, ராக்கெட் ஏவுதலின் கவுன்ட்டவுன் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் நேற்று மாலை 5.40 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் செல்வதை இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்தனர். விண்ணில் சென்ற 2.51 நிமிடங்களில் புவி ஈர்ப்பு பகுதியில் இருந்து ராக்கெட் வெளியே சென்ற நிலையில், அதன் தலைப்பகுதியில் இருந்து நிசார் செயற்கைக்கோள் வெளியேறி சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதை நோக்கி பயணம் மேற்கொண்டது. சரியாக 18.46 நிமிடங்களில் பூமிக்கு மேலே 745 கி.மீ தொலைவில் திட்டமிட்டபடி சுற்றுவட்ட பாதையில் நிசார் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை கண்காணித்து வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்வுகளை பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள நிசார் செயற்கைக்கோள் இதுவரை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விட சிறப்பு வாய்ந்ததாகும்.

ஏனெனில் நாசாவின் எல் பாண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ் பாண்ட் என்ற இரட்டை சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் இந்த செயற்கைக்கோளில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும். குறிப்பாக, இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.

குறிப்பாக பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை அபாயங்களில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ள இடஞ்சார்ந்த தரவுகளை முழுமையாக வழங்கும். மேலும், இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதில் இது 102வது ராக்கெட். அதிலும் 18 ஜிஎஸ்எல்வி விண்ணில் ஏவப்பட்டு அதில் 14 வெற்றி பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12வது கிரையோஜெனிக் இன்ஜினுடன் ஜிஎஸ்எல்வி தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* 2 ஆண்டுகள் காலதாமதமான திட்டம்

நாசவுடன் இஸ்ரோ இணைந்து செயற்கைகோள் தயாரிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி 10 வருடங்கள் கழித்து கடந்த 2023-ம் ஆண்டில் நிசார் செயற்கை கோள் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், செயற்கைக்கோள் உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டதால் ஏவுதல் தள்ளிப்போனது. தொடர்ந்து செயற்கைக்கோளில் உள்ள ஆண்டெனாவில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. பின்னர் நாசா விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ இணைந்த அவை சரி செய்யப்பட்டன. இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்று தற்போது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

* சர்வதேச விண்வெளி துறையில்

மீண்டும் உச்சம் பெற்ற இஸ்ரோ

நிசார் திட்டத்தின் வெற்றி மூலம், சர்வதேச விண்வெளித் துறையில் இஸ்ரோவுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பான், பிரான்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய விண்வெளி மையங்களுடன் சேர்ந்து வரும் காலத்தில் இஸ்ரோ பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது.

* விவசாயத்தில் நிசார் பங்கு

நிசார் செயற்கைக்கோளில் பயிர்கள் வளர்ச்சி மற்றும் மண்ணின் தன்மை, ஈரப்பத்தை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மண்ணிலும் பயிர்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, தாவரங்களின் ஆரோக்கியம் போன்ற தரவுகளை நுணுக்கமாக பெறமுடியும். இவை விவசாயிகள் பயிர்களை நடவு செய்து அறுவடை செய்வதற்கு உரிய சரியான காலகட்டத்தை புரிந்துகொள்ள உதவும். இது தவிர பருவநிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க வழிவகுக்கும்.